அண்டப்புளுகர் ஆகாசப்புளுகர் – யார்

அண்டப்புளுகர் ஆகாசப்புளுகர் – யார்

பொய்யிலே பிறந்து பொய்யிலே கட்சியை வளர்த்த தி.மு.க. மோடியின் அறிவிப்பை அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என ஸ்டாலின் கூறியது அரசியல் அநாகரிகமாகும்.  ஒரு பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சித் தலைவர், அடுத்த முதல்வர் நான் தான் என மார்தட்டும் ஒருவர், பிரதமரை அநாகரிமாக பேசுவது சரியான நாகரிகமா என்பதை சிந்திக்க வேண்டும்.  ஜெ உயிருடன் இருந்தால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பார் என மோடி கூறியதை அண்டப்புளுகு என்றால், அ.இ.அ.தி.மு.க. பா.ஜ.க.வின் பினாமி என ஜெ உயிருடன் இருந்த போது விமர்சனம் செய்த தி.மு.க. வின் தலைவர்கள் அண்டப்புளுகர், ஆகாசப்புளுகர் என்பதை மறந்து விட்டு விமர்சனம் செய்கிறார்.

          தி.மு.க. ஆட்சியில் வாய் பந்தல் போட்ட திட்டங்கள் என்னவாயிற்று என்ற கேள்வியை எழுப்பினால்,  அண்டப்புளுகு புளுகியவர்கள்  தி.மு.க.வின் தலைவர்கள் என்பது தெரியவரும்.   21 லட்சம் வீடுகள் ஏழை, எளிய மக்களுக்கு கட்டித்தரப் போவதாகவும், அதில் மூன்று லட்சம்  வீடுகள் தேர்தலுக்கு முன்பு தந்து விடுவதாகவும், கூறி  டோக்கனை கொடுத்த தி.மு.க. எத்தனை வீடுகள் வழங்கப்பட்டது என்பதை ஆராய்ந்தால், ஓட்டுகளை பெறுவதற்கு  புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டவர்கள்.   மகளிர் தினத்தில், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கான இட ஒதுக்கீடு 33 சதவீதத்தை அமுல்படுத்தப்படும் என தற்போது கூறும் ஸ்டாலின், பத்தாண்டுகள் ஆட்சியிலிருக்கும் போது, பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியதுண்டா இது அண்டப்புளுகு கிடையாதா என்பதை பார்க்க வேண்டும்.  மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக லாலு பிரசாத் யாதவ் குரல் கொடுத்த போது, அவரிடம் பேசி அமுல்படுத்த எந்த முயற்சியை தி.மு.க. எடுத்தது.  தற்போது ஆட்சிக்கு வந்தால் என்ற அண்டப்புளுகு புளுகுவது மோடியா அல்லது ஸ்டாலினா என்பதை சிந்திக்க வேண்டும்.

          மத்தியில் ஆட்சியிலிருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக விவாதம் நடந்த போது, தயாநிதி மாறன் பதவியைவிட்டுச் செல்லும் போது, இரண்டாமிடத்திலிருந்த பி.எஸ்.என்.எல்  பழைய டென்டர்களை ரத்து செய்து விட்டு, புது டென்னடர் விடாமலே, கருவிகளே வாங்காமல், புதிய இணைப்பும் தராமல் தனியாருக்கு சாதகமாக இருந்து விட்டு,  நான்காமிடத்திற்கு தள்ளப்பட்டு, முதலிடத்தில் இருப்பதாக பொது மக்கள் மத்தியில் பேசிய தி.மு.க.வினர் அண்டப்புளுகர்கள் என்பது தெரியாதா.   ஆ.ராசா தலித் என்பதால் பழிவாங்கப்பட்டார் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.  ரத்தன் டாடா, அனில் அம்பானி, பர்காதத், சங்கர் ஐயர், வீர்சங்கி, தருண்தாஸ்  போன்றவர்களின் லாபியால் தான்.

         அடைந்தால் திராவிட நாடு, இல்லையோல் சுடுகாடு என்றவர்கள் ஆட்சிக்கு வந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக கடந்த பின்னர், சட்ட மன்றத்தில் திராவிட நாடு தீர்மானம் இயற்றாதவர்களை என்ன பெயர் வைத்து அழைக்கலாம்.   ஆட்டுக்கு தாடியும், ஆட்சிக்கு கவர்னரும் தேவையா என கேள்வி எழுப்பிய தலைவர்கள் அண்டப்புளுகர்கள், ஆகாசப் புளுகர்கள் கிடையாதா?.  வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என கூச்சல் போட்டவர்கள், வடவர்களிடம்  ரூ 200 கோடி கடன் பெற்றவர்களின் கோஷம் அண்டப்புளுகு ஆகாசப் புளுகு. 

          ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என முழக்கமிட்டவர்களின் ஆட்சியில் கலைஞர் காப்பீடு திட்டம் என்ற பெயரில், தனியார் மருத்துவமனை கொள்ளையடிக்க வழி வகை செய்யப்பட்டு, தங்கள் குடும்பம் 700 கோடி கொள்யைடிக்க வழி வகுத்தவர்கள் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என கூறியது அண்டப்புளுகு என்பதை தவிர வேறு வார்த்தைகள் கிடையாது.  

          இந்து மதத்தை இழிவாக பேசி திரிந்தவர்கள், ஒன்றே குலம், ஒருவனே தேவன் என கூறியது அண்டப்புளுகு,  தி.மு.க. எந்த மதத்திற்கு எதிரான இயக்கம் கிடையாது என தனது பிறந்த நாள் விழாவின் போது பேசியது அண்டப்புளுகு ஆகாசப் புளுகு என்பதை வாக்காளர் மறந்திருக்க மாட்டார்கள்.  தமிழ், தமிழன், தமிழ் இனம் என வாய் கூசாமல் கூச்சலிடும் தி.மு.க. 10 வருட மத்திய ஆட்சியில் இரண்டு லட்சத்திற்கு அதிகமான ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சிதான் இலங்கை பிரச்சினையில் தீர்வு காண முடியும் என தற்போது பேசிவருவது ஸ்டாலினின் அண்டப்புளுகாகும்.  நேரு, இந்திரா காந்தியை  கிழ்தரமாக விமர்சனம் செய்து விட்டு, அவர்களின் வாரிசுகளிடம் ஒட்டி உறவாடி வருவது அண்டப்புளுகரின் அன்றாட செயலாக தெரியவில்லையா ஸ்டாலினுக்கு. 

- ஈரோடு சரவணன்