அப்துல் கலாம் கனவுத் திட்டம் - இந்தியா விஷன் 2020

அப்துல் கலாம் கனவுத் திட்டம் - இந்தியா விஷன் 2020

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் கனவுத் திட்டமான இந்தியா விஷன் நிறைவேற்றும் வகையில் நாடு முழுவதும் ஒரு கோடி தன்னார்வலர்களைப் பொறுபேற்கச் செய்யும் திட்டம் அவரது நினைவிடத்தில் தொடங்கப்பட்டது. 

நாட்டின் தென்கோடி பகுதியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் பிறந்து தனது முயற்சியாலும், அறிவியல் வளர்ச்சியாலும் நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைந்தவர், மறைந்த முன்னாள் ஜனாதிபதி  டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். நாட்டுக்காக எண்ணற்ற ஏவுகணைத் திட்டங்களைச் செயல்படுத்தி வலிமைமிக்க நாடாக மாற்றியது மட்டுமல்லாமல், தனது பதவிக் காலத்தில் நாடு முழுவதும் உள்ள மாணவர்களைச் சந்தித்து ஊக்கப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே தனது உயிரினையும் இழந்தார். `அக்னிச் சிறகுகள்' எனும் தன் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்ட அப்துல் கலாம், நாட்டின் வளர்ச்சிக்காக ``இந்தியா விஷன் 2020'' என்ற திட்டத்தையும் முன்னெடுத்துச் சென்றார். 

அப்துல் கலாம் வரையறுத்த 2020-ம் ஆண்டு பிறக்க இன்னும் ஓராண்டே உள்ளது. இந்நிலையில், அவரது கனவுத் திட்டத்தை முன்னெடுக்கும் பணிகளில் நாடு முழுவதும் உள்ள 1,0,00,2,020  தன்னார்வலர்களை உருவாக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.நல்லோர் வட்டம் என்ற அமைப்பின்மூலம் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின்படி நாட்டில் உள்ள ஒவ்வோர் இந்தியரும் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் ஒரு பகுதியையோ, தெருவையோ, ஒரு துறையையோ அல்லது ஒரு செயல் திட்டத்தையோ பொறுப்பேற்றுக்கொண்டு செயல்படும் வகையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

இதற்கான தொடக்க விழா ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் நடந்தது. அப்துல் கலாமின் பேரன்கள் ஷேக் தாவுத், ஷேக் சலீம் ஆகியோர் முன்னிலையில் இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், `இந்தியா விஷன் 2020 - என் பொறுப்பு' என்ற அட்டையை அறிமுகம் செய்தனர்.

ராமேஸ்வரத்தைப் போன்றே உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலத் தலைநகர்களிலும் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.