அமெரிக்காவில் பாஜக ஆதரவாளர்கள் பிரசாரம்

அமெரிக்காவில் பாஜக ஆதரவாளர்கள் பிரசாரம்

இந்திய மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் பாஜகவுக்கு ஆதரவளித்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் பேரணி நடத்தினர். 

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் காவலாளிகள் பேரணி (செளகிதார் மார்ச்) என்ற பெயரில், இந்திய -அமெரிக்கர்கள் பிரசாரம் செய்தனர். பேரணியில் பங்கேற்ற பாஜகவின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவர் கிருஷ்ணா ரெட்டி கூறுகையில், இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை மீண்டும் கொண்டு வருவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுதிய பதாகைகளை ஏந்திக் கொண்டு அனைத்து இந்தியர்களும் உற்சாகமாக மோடிக்கு ஆதரவு திரட்டினர் என்றார். 

பிரதமர் மோடிக்காக வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற குழு வாஷிங்டன் நகரில் வாகனப் பேரணி நடத்தினர். இதில் பங்கேற்ற அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்கள் அமைப்பு தலைவர் கன்வால் சிங் பேசுகையில், உலகம் முழுவதும் உள்ள சீக்கிய மக்களுக்காக பிரதமர் மோடி பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் சீக்கியர்களின் கோரிக்கைகளை மோடி தவறாமல் நிறைவேற்றியுள்ளார் என்றார். 

இவைமட்டுமன்றி, ஹுஸ்டன், லாஸ் ஏஞ்சலீஸ், சிகாகோ, சியாட்டில் உள்ளிட்ட நகரங்களிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பேரணி மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.