அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு இந்திய கேப்டன்

அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு இந்திய கேப்டன்

சௌரவ் நேத்ரவல்கர் இந்தியாவில் மும்பையில் பிறந்தவர். கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்த சௌரவ் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் பந்து வீச்சாளராக இருந்தார். 2010 ல் நடைபெற்ற  19 வயதுக்குப்பட்டோருக்கான உலகக்கோப்பையிலும் இந்திய அணியில் பங்கு பெற்று அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், அணி வெற்றி பெறவில்லை. 

2013ல் ரஞ்சி டிராப்பியில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். இடையில் எஞ்சினியரிங் படிப்பு குறுக்கிட்டதால், கிரிக்கெட்டை ஒதுக்கி வைத்துவிட்டு, படிப்பில் கவனம் செலுத்திய சௌரவ் பொறியியல் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.

அங்கு, பட்ட மேற்படிப்பிற்கு பின் புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனமான ஆரக்கல்லில் பணிபுரிந்து வருகிறார். பட்ட மேற்படிப்பு படிக்கும் போதே  மீண்டும் கிரிக்கெட் ஆர்வம் விழித்துக்கொண்டது. வார இறுதி நாட்களில் சக வீரருடன் அவர் வாழும் சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஆறு மணிநேரம் பயணம் செய்து லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு சென்று கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார்.

இவரது கடும் உழைப்பிற்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. அமெரிக்க கிரிக்கெட் அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் சௌரவ். அடுத்த வாரம் ஓமனில் நடைபெற உள்ள  உலக கிரிக்கெட் லீக் மூன்றாவது டிவிஷன் போட்டிக்கு அணியை தலைமை தாங்க இருக்கிறார்.   இந்த  போட்டிகள் 2023ல் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிகளுக்கான தகுதி போட்டிகளாக அமைகின்றன.

அமெரிக்காவில் கிரிக்கெட் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்தியர்களான சுஷில் நட்கர்னி மற்றும் இப்ராஹீம் கலீல் ஆகியோர் ஏற்கனவே அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர் என்றாலும், உலகத்தர போட்டிகளுக்கு இந்தியர் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதல்முறையாகும்.