அம்மா கிட்ட போகணும்....!

அம்மா கிட்ட போகணும்....!

திருச்சியில் கைப்பற்றப்பட்ட அரிய வகை உயிரினமான தேவாங்கின் தாய் தேவாங்கை வனத்துறையினர் தேடி வருகிறார்கள். கார்த்திக் என்பவர் நேற்று முன்தினம் அலுவலகம் முடிந்து தனது காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, பெல் பூங்கா அருகே ஒரு வினோதமான விலங்கு சாலையை கடக்க முயல்வதைக் கண்டார். காரிலிருந்து இறங்கி சென்று பார்த்த போது அது ஒரு குட்டி தேவாங்கு என்பது தெரிந்தது. 

அதை தன் வீட்டிற்கு எடுத்து வந்து பாதுகாத்த அவர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,"கைப்பற்றப்பட்ட தேவாங்கு சுமார் இரண்டு மாதம் வயதுடையது. தாயை பிரிந்ததால் நாங்கள் எது கொடுத்தாலும் சாப்பிடவில்லை. இது மிகவும் சிறியதாக இருப்பதால், காட்டில் விட்டால் மற்ற விலங்குகளால் இதற்கு ஆபத்து வரக்கூடும். எனவே, இதன் தாயை தேடி வருகிறோம். நேற்று இது கைப்பற்றப்பட்ட இடத்திற்கு இதன் தாய் தேடிக்கொண்டு  சென்றோம். மழை அதிகமாக பெய்ததால் விரிவாக தேட முடியவில்லை. எனவே, இன்னும் இரண்டு நாட்கள் தேடுவோம். அதன் தாய் கிடைக்கவில்லை என்றால் ஏதாவது ஒரு உயிரியல் பூங்காவிற்கு குட்டி தேவாங்கு அனுப்பி வைக்கப்படும்." என்று கூறினர்.