அம்மி, உரலை பயன்படுத்திய கர்ப்பிணிகள்! சுகப் பிரசவத்தை ஊக்குவிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

அம்மி, உரலை பயன்படுத்திய கர்ப்பிணிகள்! சுகப் பிரசவத்தை ஊக்குவிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

சுகப் பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையில் கர்ப்பிணிகள் அம்மி, உரலைப் பயன்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. "புளூம்' கருத்தரித்தல் மையத்தின் சார்பில் அன்னையர் தினத்தையொட்டி நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பங்கேற்றனர். பாரம்பரிய பிரசவ முறைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக இத்தகைய நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

கர்ப்பிணிகளுக்கு நடனப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில உடற் பயிற்சிகளை நடன அசைவுகள் மூலமாக கற்பிக்கும் வகையில் அது அமைந்திருந்தது. 

முன்பெல்லாம் இந்தியாவில் அதிக அளவில் சுகப் பிரசவங்கள் நடைபெற்று வந்தன. ஆனால், தற்போது வாழ்க்கை முறை மாற்றம், சரியான உடற்பயிற்சிகள் இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. மருத்துவமனைகள்தான் அதற்கு காரணம் என பரவலாகக் கூறப்பட்டாலும், கருத்தரிக்கும் பெண்களில் பெரும்பாலானோர் சுகப் பிரசவத்துக்கான முயற்சிகளை முன்னெடுப்பதில்லை என்பதுதான் உண்மை.

கடந்த காலங்களில் கர்ப்பிணிகள் வீட்டு வேலை செய்தார்கள்; எங்கு போவதாக இருந்தாலும் நடந்து சென்றார்கள். ஆனால், தற்போது ஒரு பெண் கருவுற்றாலே, அவரை எந்த வேலையும் செய்ய விடாமல், குனிய விடாமல், நிமிர விடாமல் பல கட்டுப்பாடுகளை குடும்பத்தினர் விதிக்கின்றனர். அதன் காரணமாகவே, சுகப் பிரசவத்துக்கான வாய்ப்புகள் அவர்களுக்கு குறைந்து விடுகின்றன. மீண்டும் பழையபடி அத்தகைய பிரசவங்கள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.