அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர் நியமனம் - உச்சநீதிமன்றம் இன்று பரிசீலனை

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர் நியமனம் - உச்சநீதிமன்றம் இன்று பரிசீலனை

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகள் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 26-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, "இது வெறும் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. நிலம் தொடர்பான பிரச்னை என்றால், எளிதில் தீர்ப்பு வழங்கிவிடலாம். ஆனால், ஹிந்து-முஸ்லிம் மதத்தினரிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்காக மத்தியஸ்தரை நியமனம் செய்வது தொடர்பாக மார்ச் 6-ஆம் தேதி பரிசீலிக்க உள்ளோம்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமை நடைபெறவுள்ளது. அப்போது, மத்தியஸ்தரை நியமிப்பது தொடர்பாக நீதிமன்றம் பரிசீலித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.