ஆரோக்கிய பாரதமே எனது லட்சியம் ;பிரதமர்

ஆரோக்கிய பாரதமே எனது லட்சியம் ;பிரதமர்

புதுடில்லி: இந்தியர்கள் உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ளவும், உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்த்துவதற்காகவும், 'பிட் (FIT) இந்தியா' இயக்கத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, ஆரோக்கிய இந்தியாவே எனது லட்சியம் எனக்கூறினார்.

மத்திய அரசின் சார்பில், துாய்மை இந்தியா, யோகா தினம், டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா என, பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில், டில்லியில் இன்று(ஆக.,29) நடந்த விழாவில் ''பிட் இந்தியா'' என்ற திட்டத்தை, பிரதமர் மோடி, துவக்கி வைத்தார். 

ஒவ்வொருவரும் உடல் திறனை வளர்த்துக் கொள்ளவும், உடல் உறுதியை பேணும் வகையிலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்ற வேண்டி , இந்த திட்டம் துவங்கப்பட்டது. இந்த இயக்கத்திற்கு சிந்து, ஹிமாதாஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இதன் பின் பிரதமர் மோடி பேசுகையில், இதே நாளில் பிறந்த விளையாட்டு வீரர் தயான் சந்த், உடற்தகுதி மூலம் உலகை ஆச்சர்யபடுத்தினார். நாம் பள்ளிக்கு செல்லாவிட்டாலும், மாணவர்கள் போல் தினமும் கற்று கொள்கிறோம். உடற்தகுதி என வரும் போது நமது மனநிலையை மாற்றி கொள்ள வேண்டும். 

எப்போதும் பரபரப்பாக இருப்பதால், உடற்தகுதியை மக்கள் புறக்கணிக்கின்றனர். உணவு கட்டுப்பாடு குறித்து பேசுவது நாகரீகமாகிவிட்டது. வசதிகள் இருந்தாலும், பலர் உடற்தகுதியை புறக்கணிக்கின்றனர்.இன்றைய நாளில் அதிகரித்து வரும் நீரழிவு நோய் பொது பிரச்னையாக உள்ளது. வாழ்க்கை முறையில் செய்யும் சிறிய மாற்றம், பெரிய பலன்களை அளிக்கும். ஆரோக்கிய இந்தியாவே எனது லட்சியம். 

 

விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், சீனாவில் பல திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட உடற்தகுதிக்கான இலக்குகளை பல நாடுகள் நிர்ணயித்துள்ளன. நமது, வழக்கமான பழக்க வழக்கங்களை, உடற்தகுதிக்கு ஏற்றவாறு மாற்ற போராட வேண்டும். கடுமையான முயற்சியின் மூலமே உடற்தகுதியை எட்ட முடியும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.

 

இந்த விழா, தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பானது. இதை, மத்திய அரசு அலுவலகங்கள், கல்லுாரிகளில் பார்க்க அறிவுறுத்தப்பட்டது. விழாவில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், 'உடல் உறுதியை பேணுவோம்' என, உறுதிமொழி எடுக்கப்பட்டது.