ஆர்.எஸ்.எஸ்  சமன்வய பைடக் -  என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது..?

ஆர்.எஸ்.எஸ் சமன்வய பைடக் - என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது..?

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் 35 சார்பு அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் கடந்த சனிக்கிழமை தொடங்கி 3 நாள்களாக நடைபெற்றது. 

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை பாஜக பொதுச் செயலாளரும், வடகிழக்கு மாநிலங்களின் பாஜக பொறுப்பாளருமான ராம் மாதவ், ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஸஹசர்காரியவாக் தத்தாத்ரேயா ஹொசபலே ஆகியோர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை விவரித்தனர். அவர்கள் கூறியதாவது:

நமது சமூகத்தில் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாகுபாடு காணப்படுகிறது. எனவே, அரசமைப்புச் சட்டப்படி கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தேவைப்படுகிறது. இடஒதுக்கீட்டுச் சலுகையால் பயனடைபவர்கள் தேவை என்று கருதும் வரை, அந்தச் சலுகை தொடர வேண்டும்.

என்ஆர்சி நடவடிக்கைக்கு வரவேற்பு: வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் 35 லட்சம் முதல் 40 லட்சம் பேர் வரை அஸ்ஸாமில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு சட்டப்பூர்வமான ஆவணங்களை முந்தைய அரசுகள் வழங்கியுள்ளன. குறிப்பாக, வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய பலரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதனால், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிவது மிகவும் சிக்கலான, குழப்பமான பணியாக உள்ளது.

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியலில் சில தவறுகள் நடந்துள்ளன. அந்தத் தவறுகள் திருத்தப்பட்ட பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு மேற்கொண்ட என்ஆர்சி பதிவேடு தயாரிப்பு பணி, வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

பிரசாரம் தொடக்கம்: தண்ணீர் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது, மரம் நடுவதை ஊக்குவிப்பது ஆகியவற்றை வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் சார்பில் நாடு தழுவிய பிரசாரம் தொடங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.