ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை ஜம்மு - காஷ்மீரில் பதற்றம்

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை ஜம்மு - காஷ்மீரில் பதற்றம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரையும், அவரது பாதுகாப்பு அதிகாரியையும், பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதால், பதற்றம் நிலவுகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், உள்ளூர் தலைவர் சந்திரகாந்த் சர்மா, தன் பாதுகாப்பு அதிகாரி, ரஜீந்தருடன் நேற்று சென்றார்.அவர்களை பின் தொடர்ந்து, மருத்துவமனைக்கு வந்த பயங்கரவாதி ஒருவன், திடீரென அவர்களை நோக்கி, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். 

இதில், பாதுகாப்பு அதிகாரி ரஜீந்தர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி, அவரது துப்பாக்கியையும் பறித்து தப்பிச் சென்றான்.படுகாயங்களுடன், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, சந்திரகாந்த் சர்மா, சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிஷ்துவார் மற்றும் பாதர்வா நகரங்களிலும், அண்டை மாவட்டமான தோடாவிலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அங்கு பதற்றம் நிலவுவதால், பாதுகாப்புக்காக, ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.