"ஆவணங்கள் அழிந்து விட்டன" - நீதிபதிகள் அதிர்ச்சி

"ஆவணங்கள் அழிந்து விட்டன" - நீதிபதிகள் அதிர்ச்சி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, புன்னைவன நாதர், ராகு, மயில் ஆகிய 3 புராதனச்சிலைகள் சேதமடைந்துள்ளால் அவற்றை மாற்ற வேண்டும் என அப்போதைய தலைமை ஸ்தபதி முத்தையா பரிந்துரை செய்தார். இதன்படி 3 சிலைகளும் மாற்றப்பட்டு, புதிய சிலைகள் நிறுவப்பட்டன.

இதுகுறித்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், ‘புதிய மயில் சிலையில் ஆகம விதிமீறல் இருக்கிறது. ஆகம விதிப்படியான பழைய மயில் சிலையில், தலையில் கொண்டை கிடையாது; வாயில் பூ இருந்தது. புதிய மயில் சிலையில் தலையில் கொண்டையும் வாயில் பாம்பும் இருக்கிறது. மேலும், மாற்றப்பட்ட புராதனச் சிலைகளை பாதுகாக்காமல் திருடியுள்ளனர். இதில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று முறையிடப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோரை கொண்ட பென்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. 

விசாரணையில் அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளிவந்துள்ளன. புராதன மயில் சிலையை மாற்றியது தொடர்பான சிலைகடத்தல் பிரிவினரின் கேள்விகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் மழுப்பலான பதில்களையே அளித்து வருவதாகவும், மயில் சிலை மாற்றியது தொடர்பான ஆவணங்கள் அழிந்து விட்டதாகவும் அவர்கள் கூறியதாக  அரசு வக்கீல் கிருத்திகா கமல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.

"அழிந்து விட்டன என்றால் எப்படி அழிந்தன? யார் அழித்தது? எப்போது அழிந்தது?" என்று நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் தீர விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

ஆவணங்கள் அழிந்து விட்டன என்கிற வாதம் சிலை மாற்றப்பட்டு அதற்கு பதிலாக போலி சிலை வைக்கப்பட்டுள்ளது, பதினான்காண்டுகளாக மக்கள் போலி சிலையை வழிபட்டு வருகின்றனர்  என்ற மனுதாரரின் கூற்றை நியாயப்படுத்துவதாக உள்ளது., என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆவணங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அதே நேரத்தில் தொலைந்த புராதன சிலையை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு வக்கீல் கிருத்திகா தெரிவித்தார். 

"ஆவணங்களை அழிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் மிகவும் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். அதற்காக அவர்கள் சனி ஞாயிறுகளில் கூட வேலை பார்த்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்துள்ளோம். " என்று சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார். 

பின்னர், நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.