இசை விழா 2018

இங்கு பல நண்பர்களுக்கு கர்நாடக சங்கீதம் என்பது ஏதோ மிகப்பண்டிதர்களுக்கானது என்ற எண்ணம் இருக்கலாம் ஆனால் அது தவறு.கர்நாடக இசை என்பது முழுக்க முழுக்க, அனைத்து மனிதர்கள் மனதிலும் தெய்வ பக்தியை ஏற்படுத்த உண்டாக்கப்பட்ட சங்கீதமாகும்.இதன் முதல் நோக்கமும் கடைசி நோக்கமும் ஒன்றுதான்..அதுவே பக்தி. கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என வழங்கப்படும் மகான் தியாகராஜர், முத்துசாமி தீக்ஷதர், ஷ்யாமா சாஸ்த்ரிகள் ஆகிய மூவரும் மிக சிறந்த பக்தர்கள்.ஸ்ரீராமர், அம்பாள், தேவி உபாசகர்கள்.தங்கள் பாடல்களில் இறைவனை பூஜித்து மகிழ்ந்தவர்கள்.பணத்தையும் புகழையும் துச்சமாக கருதியவர்கள்.

எல்லா துறைகளைப்போலவே இந்த துறையும் சந்தை பொருளாகிவிட்ட இன்றைய நிலையில் இப்படி தூய்மையான பக்தியுடன் பாடும் கலைஞர்களை காணுதல் அரிது.ஆயினும் இல்லாமல் போய்விடவில்லை.

இங்கு நான் ஒரு எளிய பாடலை உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிறேன்.இது சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட செய்யுள் தொகுப்புகள் ஒவ்வொரு செய்யுளும் ஒவ்வொரு ராகத்தில் இசை அமைக்கப்பட்டுள்ளது.திருமாலின் அவதாரங்களின் பெருமையை சொல்லும் வண்ணம் அமைந்த இந்த பாடல் கல்மனதையும் கரைத்து அனைவரையும் அந்த நாராயணன் அருகில் கொண்டு சேர்க்கும்.இதை பாடியுள்ளவர் உலகப்புகழ் பெற்ற இசையரசி நம் எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள்.ஒரு ஆறு நிமிடங்கள் ஒதுக்கி இந்த பாடலை இயர்போன் அணித்து கேளுங்கள்.


கடைசி சரணத்தில்,

♪ ♫ ♬மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் 
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே;♪ ♫ ♬

என்று அந்த இசையரசி உருகி பாடும்போது உங்கள் கண்களில் கண்ணீர் பெருகும் என்பதற்கு நான் உத்திரவாதம்.அன்று முதல் ஒரு நாளைக்கு சில தடவைகளாவது நாராயணா என்று சொல்வீர்கள் என்பதும் நிச்சயம்.

வீண் கேள்விகளுக்கு இடங்கொடாமல் பக்தியுடன் கேளுங்கள்.இறையுணர்வு பெருகும்.

உங்கள் கவலைகளை கண்ணனை தீர்க்க சொல்லலாம்,
கவியரசர் சொன்னது போல 

♪ ♫ ♬கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா.
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா ♪ ♫ ♬

என மெய்யுருகி பிரார்த்தியுங்கள்.
அனைத்துக் கவலைகளும் நீங்கும்.
நாராயணா!  

-  ரங்கநாதன் கணேஷ்