இசை விழா 2018 -  ராகம் கண்டுபிடிப்பது எப்படி?

இசை விழா 2018 - ராகம் கண்டுபிடிப்பது எப்படி?

திருச்சி & ராகம்.

திருச்சிகாரர்களின் இன்னொரு அதி முக்கிய பொழுதுபோக்கு ராகம் கண்டு பிடித்தல்..சினிமா,கர்நாடக சங்கீதம்,வட இந்திய சங்கீதம் ஆகிய எல்லாவற்றிலும் அமைந்துள்ள பாடலைக்கேட்டு அது எந்த ராகம் என விவாதிப்பது.இது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.ஒரு பாடல் "காம்போதியா கல்யாணியா?" என்ற வழக்கை கீழ் கோர்ட்டிலேயே தீர்த்துவிடலாம்.ஆனால் "கர்ணரஞ்சனியா ஹுசேனியா?" என்ற வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை கூடபோய் விடும்.இதனால் ஜன்மபகைவர்களாகிய நண்பர்கள் கூட உண்டு.ஆகவே நான் இந்த விஷயத்தில் ரொம்ப ஜாக்கிரதை..
"நீங்க ராகம் கண்டுபிடிப்பீங்களா?" என்ற கேள்வியை,

இளையவர்கள் கேட்டால்
"ஓ.தப்பா கண்டுபிடிப்பேன்" என்று சொல்லி 
அவர்களை ஓட வைப்பேன்.

அதே கேள்வி பெரியவர்களிடமிருந்து வரும்போது 
சற்று மரியாதையாக,
"நிச்சயம் முயற்சி செய்கிறேன்..ராகத்தின் அங்க அடையாளங்கள் 
அதன் சமீபத்திய போட்டோ,அதை கடைசியில் பார்த்தது யார், எப்பொழுது என்ற விவரங்களை மட்டும் சொல்லுங்கள்!" 
என அவர்களை ஊக்கப்படுத்துவேன்..

இவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தும் இல்லாளின் இரண்டு
மூன்று கேள்விக்கு(இது என்ன ராகம்?") என்னை அறியாமால்
"வசந்தா" என (தப்பாக) ஒரே பதிலை சொல்லி,
("அது என்ன, எல்லாத்துக்கும் ஒரே பேர சொல்றீங்க?)

என் அதிருஷ்டம்(!) அடுத்த நாள் எனக்கு ஒரு போன்கால் 
எடுத்தது இவிங்க..அந்தமுனையில், 
"கணேஷ் சார் இருக்காரா?" 
"நீங்க?" 
"வசந்தான்னு சொல்லுங்க; அவருக்கு தெரியும்!"

ஆகவே திருச்சி மாந்தர்காள்,,, ராகம் ஜாக்கிரதை.


- ரங்கநாதன் கணேஷ்