இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாக். தீவிரவாதிகள் 170 பேர் இறந்தனர் - இத்தாலி பெண் பத்திரிகையாளர் புது தகவல்

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாக். தீவிரவாதிகள் 170 பேர் இறந்தனர் - இத்தாலி பெண் பத்திரிகையாளர் புது தகவல்

காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் கடந்த பிப்ரவரியில் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் இறந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப் படையினர் பாகிஸ்தானின் கைபர்-பக்துன்கவா மாகாணத்திலுள்ள பாலகோட் பகுதியில் அமைந்துள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இறந்துவிட்டனர் என இந்தியா அப்போது அறிவித்தது. ஆனால் இதை பாகிஸ்தான் மறுத்து வந்தது. பாலகோட் பகுதியில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில் யாரும் இறக்கவில்லை என்று தொடர்ந்து பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வந்தது. மேலும் அந்தப் பகுதியில் பத்திரிகையாளர்கள் யாரையும் பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் இந்தியா நடத்திய தாக்குதலில் 130 முதல் 170 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் வரை இறந்தனர் என்று இத்தாலியைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரான்செஸ்கா மரினோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய்யான தகவல்களைக் கூறி வருகிறது. இந்திய விமானப்படை தாக்குதலில் 130 முதல் 170 தீவிரவாதிகள் வரை இறந்திருக்கலாம். ஆனால் தாக்குதலில் எந்தவித உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து பொய் கூறி வருகிறது.

இந்த விஷயத்தில் உலகுக்கு உண்மைத் தகவல்கள் தெரிய வேண்டாம் என மூடி மறைக்கப் பார்க்கிறது பாகிஸ்தான்.

அங்கு காயமடைந்திருந்த தீவிரவாதிகளை, ஹர்கர்-உல்-முஜாகிதீன் முகாமுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவ டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

சுமார் 45 தீவிரவாதிகள் வரை அங்கு காயமடைந்திருந்தனர். அவர்களுக்கு இப்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 20 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த தீவிரவாதிகள் இன்னும் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளனர்.

கடந்த சில வாரங்களாக நான் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன்.பாலகோட் தாக்குதலில் 130 முதல் 170 பேர் இறந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து இத்தனை பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் 11 பேர் பயிற்சியாளர்கள்.

பாலகோட் பகுதியிலுள்ள மலையின் உச்சியில் தொடர்ந்து தீவிரவாத பயிற்சி முகாம் இயங்கி வருகிறது. இது முழுக்க முழுக்க பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு பாகிஸ்தான் ராணுவ கேப்டன் ஒருவரின் பொறுப்பில் முகாம் இயங்குகிறது. அப்பகுதிக்குச் செல்ல உள்ளூர் போலீஸாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை” என்றார்.

பத்திரிகையாளர் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.