இந்துக்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர் நீக்கம்

இந்துக்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர் நீக்கம்

பாகிஸ்தானின் ஆளும் பிடிஐ கட்சியின் பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் பண்பாட்டு அமைச்சர் ஃபயாசுல் ஹசன் சோஹான் இந்துமதம், மோடி மற்றும் இந்திய ராணுவம் பற்றிய வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்களைக் கூறியதற்காக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி இம்ரான் கான் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். 

கடந்த மாதம் இந்துக்களை குறிவைத்து, ‘பசு சிறுநீரைக் குடிப்பவர்கள்’ என்று கிண்டலடித்திருந்தார் ஃபயாசுல் சோஹான். மேலும், “நாங்கள் முஸ்லிம்கள் எங்களுக்கு ஒரு கொடி உள்ளது, மவுலா அலியாவின் தீரத்தின் கொடி, ஹஸ்ரத் உமராவின் வீரக்கொடி, உங்களிடம் இது போன்ற கொடி உள்ளதா? எங்களை விட 7 மடங்கு நீங்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணம் வேண்டாம். எங்களிடம் உள்ள எதுவும் உங்களிடம் இல்லை. நீங்கல் சிலைகளை வணங்குபவர்கள்” என்று பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இவரது கருத்துக்களை மிகவும் பொறுப்புடன் அணுகிய இம்ரான் கான் பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஸ்தாருக்கு அறிவுறுத்தி ஃபயாஸுல் ஹசன் சோஹானை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கச்செய்தார். இது தொடர்பாக பிடிஐ கட்சி தன் ட்விட்டரில், “இன்னொருவர் நம்பிக்கையை புண்படுத்துவது எந்த ஒரு கதையாடலின் அங்கமும் கிடையாது. சகிப்புத்தன்மை என்ற அடிக்கட்டுமானத்தில் மேல்தான் பாகிஸ்தான் என்ற நாடு கட்டமைக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.