இந்துக்கள் மீது விரிக்கப்படும் நயவஞ்ச சதி வலை

இந்துக்கள் மீது விரிக்கப்படும் நயவஞ்ச சதி வலை

     கேரளத்தை ஆளும் இடதுசாரி கம்யூனிஸ்ட் அரசாங்கம், இந்துக்களுக்கு எதிராக நயவஞ்ச முறையில் ஒரு சதி வலையை பின்னுகிறது.  சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்திற்கு எல்லா மதத்தவர்களும் செல்லலாம் என்பதும், எல்லா வயது பெண்களும் தரிசிக்க செல்லலாம் என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.  திருவாளர் பினராய் விஜயன் முதல்வராக மாறிய பின்னர், ஒரு புறம் இந்து இயக்கவாதிகளை கொலை செய்வது தொடர்கதையாக மாறிக் கொண்டிருக்கும் சமயத்தில், இந்து சம்பரதாயங்களுக்கு எதிராக ஒரு திட்டமிட்ட ரீதியில் சதி பின்னப்படுகிறது.  சபரிமலை அய்யப்பன் சன்னிதானம் மதசார்பற்ற இடமாகும்,  மேற்படி கோவில் இந்துக்களுக்கு மட்டும் உரிமையுடையது கிடையாது,  இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் சொந்தம் உள்ளது என்றும் உயர் நீதி மன்றத்தில் தாக்கல்  செய்த அபிடவிட்டில் தெரிவித்துள்ளது.

      இடதுசாரி கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு இவ்வளவு துணிவு எங்கிருந்து வந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்.   காரணம் இரண்டு முக்கியமான விஷயங்களை தங்களது பிரமாண வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்கள்.  ஒன்று எரிமேலியில் உள்ள வாவர்  சமாதியை கொண்டுள்ள மசூதியில் தொழுகை நடத்திவிட்டுதான் சன்னிதானம் செல்கிறார்கள்.  இரண்டாவது கிறிஸ்துவர் ஏசுதாஸ் பாடும் பாசுரம் நடைதிறக்கும் முன் ஒலிப்பரப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.  மரியாதைக்குறிய பாடகர் ஏசுதாஸ், ஐயப்பனுக்கு 48 நாள் விரதம் இருந்து இரு முடி கட்டி தரிசனம் செய்கிறார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.  இதை விட மோசமான வாதம் ஒன்று வைக்கப்படுகிறது,  ஐயப்பன் சன்னிதானம் ஒரு புத்தர் விஹார்  என்ற அபாண்டமான பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் பினராயி விஜயன் அரசு. 

      சபரிமலை சாஸ்தா ஆலயம், புத்த விஹார் என்பது தவறான கருத்தாகும்.  உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையில் விவாதம் செய்வது சரியானதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  பரசுராமரால் கட்டப்பட்ட ஐந்து சாஸ்தா கோவில்களில் ஒன்று சபரிமலை சாஸ்தா.  கேரளத்தில் குளத்துப்புழா, அய்யன்காவு, பொன்னம்பலம் மேடு, அச்சன்கோவில் என்ற இடங்களில் உள்ள சாஸ்தா கோவில்களும் பரசுராமரால் கட்டப்பட்டவை தான். “சரண கோஷத்தை வைத்து கோவில் புத்த விஹார் என கூறுவது தவறு.  கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு கேள்வி கேட்க தோன்றுகிறது, சபரிமலை ஐயப்பன் கோவில், புத்த விஹார் என வாதிடுபவர்களுக்கு,  அயோத்தியில் உள்ள மசூதியில் உள்ள தூண்களில் இந்து விக்கிரஹங்கள் வரையப்பட்டதும், தாஜ்மஹாலில் இந்துக்களின் கலை நயம் இருப்பதும் அவை  இந்துக்கோவில்கள் என்றால்  மட்டும் இவர்களுக்கு கோபம் வந்துவிடும்.  எனவே இந்துக்களின் மீது நடத்தப்படும் கலாச்சார தாக்குதல் என்பது தெளிவாக தெரிகிறது.

       இதை விட கொடுமையான, நயவஞ்ச தன்மை கொண்ட வாதம்,  ஐயப்பன் கோவிலுக்கு கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் சென்று வருவதால், கோவில் பற்றி எந்த முடிவும் எடுப்பதாக இருந்தாலும், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் வக்ப் வாரியத்தின் கருத்தை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க இயலாது என உயர் நீதி மன்றத்தில் பிரமாண வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளது (the Kerala Government said that they cannot take any decision on Sabarimala temple without consulting Waqf board, Christian and Muslim organisation  ) இது இந்துக்களுக்கு எதிரான அரசு என்பதை வெட்ட வெளிச்சாமாக காட்டியுள்ளது.  திருவாளர் பினராயி விஜயனுக்கு ஒரு கேள்வி 1962-ல் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தனது மந்திரி சபையை காப்பதற்காக இஸ்லாமியர்களுக்க என மலப்புரம் மாவட்டத்தையும், கிறிஸ்துவர்களுக்கு இடுக்கி மாவட்டத்தையும் புதிதாக உருவாக்கி கொடுத்தாரே, அப்பொழுது பெருவாரியான இந்துக்களிடம் கருத்து கேட்டுவிட்டுதான் மாவட்டத்தை உருவாக்கினாரா? என்பதையும் தற்போது முதல்வர் விளக்கம் கொடுப்பாரா? என்பது தெரியவில்லை.  சுமார் 15 வருடங்களுக்கு முன் புரோப் என்ற ஆங்கில இதழில், இந்தியாவில் ஒரு குட்டி பாகிஸ்தான் மலப்புரம் மாவட்டம் என தலைப்பிட்டு, தேச விரோத சக்திகளின் செயல்பாடுகளை விவரித்து வெளியிடப்பட்டது.  அப்பொழுது கட்சியின் முக்கிய பிரமுகராக வலம் வந்த பினராயி விஜயன் என்ன கூறினார் என்பதையும் இடதுசாரிகள் தெரிவிக்க வேண்டும்.    மேலும் வரலாற்றுபூர்வமாக சபரிமலை கோவில், மதசார்பற்ற தன்மை கொண்டது என்பதும் தவறான வாதமாகும். 

            தவறான கருத்தையும் கேரள கம்யூனிஸ்ட் அரசு நீதிமன்றத்தில் பதியவிடுகிறது.  எரிமேலியில், ஐயப்பனின் நண்பராக வாபரை சித்தரித்துக் காட்டுவதும் ,  சன்னிதானத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எரிமேலியில் உள்ள வாபர் மசூதியில் கும்பிட்டு விட்டுதான் செல்கிறார்கள் என்றும் கூறியுள்ளது.  ஆனால் ஒரு முக்கியமான அம்சத்தை உயர் நீதிமன்றத்தில் கம்யூனிச அரசாங்கம் தெரிவிக்கவில்லை.  மசூதிக்கு கும்பிட வரும் ஐயப்ப பக்தர்களுக்கு விபூதி கொடுக்கப்படுகிறது.  இந்தியாவில் எந்த மசூதியிலாவது திருநீறு வழங்கப்படுகிறதா என்பதையும் அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.    மேலும் இந்தியாவிற்கு இஸ்லாம் எப்பொழுது வந்தது என்பதையும் ஆராய வேண்டும்.  கால வேறு உள்ளது என்பதை கூட தெரிந்து கொள்ளாமல், பொய் பேசுவதில் வல்லவர்கள் கம்ரேட்டுகள் என்பது தெளிவாக தெரிகிறது. 

      கேரள அரசின் முடிவை எதிர்த்து பா.ஜ.க.வின்  மாநில தலைவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 1965-ல் கேரள அரசாங்கத்தால் இயற்றப்பட்ட enforce a rule under the Kerala Hindu Places of Public Worship ( Authorisation of Entry) Act. 1965   சட்டத்தின் படி இந்து அல்லாதவர்கள் கோவில்களுக்குள் நுழைவதை தடை செய்கிறது.  கேரள அரசு செயல்படும் விதம் இந்த சட்டத்திற்கு எதிராகவே அமைகிறது.மக்களின் உணர்வுகளுக்கு எதிராக   உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அல்படுத்துவேன் என முரண்டு பிடிக்கும் பினராயி விஜயன், 1965-ல் கேரள சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய ஒரு சட்டத்திற்கு முரணாக நடப்பதும் சரியானதா என்பதையும் உச்ச நீதி மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.  மக்களின் மனநிலைக்கு மாறாக வீம்பு பிடிப்பதால் அவர்களின் நம்பிக்கையை இழக்க வேண்டியிருக்கும். அப்படி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட கட்சிகளுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

-ஈரோடு சரவணன்