இந்து தந்தை - முஸ்லீம் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கிய UAE

இந்து தந்தை - முஸ்லீம் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கிய UAE

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள சட்டத்தின் படி, ஒரு முஸ்லிம் ஆண் பிற மதத்தை சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு. அதேவேளையில், ஒரு முஸ்லிம் பெண் பிற மதங்களைச் சேர்ந்த ஆணைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடையாது.


இந்நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிரண் பாபு என்பவர் அதே மாநிலத்தை சேர்ந்த சனம் சாபூ சித்திக் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், வேலைக்காக ஐக்கிய அமீரக நாடுகளின் தலைநகரான அபுதாபி நகரில் தனது மனைவியுடன் சென்று குடியேறினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், முஸ்லிம் தாய்க்கு பிறந்த அந்த குழந்தையின் தந்தை இந்து என்பதால் அக்குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் அளிப்பதற்கு மருத்துவமனை மறுத்துவிட்டது.


இது குறித்து தெரிவித்த கிரண்பாபு, 'எனக்கு அபுதாபி விசா உள்ளது. எனக்கு, இங்குதான் இன்சூரன்ஸ் உள்ளது. எனவே, எனது மனைவியை இங்குள்ள மிடியோர் என்ற மருத்துவமனையில் அனுமதித்தேன். ஆனால், குழந்தை பிறந்தபிறகு, நான் இந்து என்பதால் எனது குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் தரமறுத்துவிட்டனர். எனது மகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு தடையின்மை சான்றிதழ் வழங்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். நான்கு மாதம் வழக்கு நிலுவையில் இருந்தது.


பிறகு, மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த கால கட்டம் மிகவும் மன உளைச்சலாக இருந்தது. நாங்கள் இந்தியா திரும்புவதற்கு இந்தியத் தூதரகம் உதவி புரிந்தது. ஆனால், எங்களது குழந்தைக்கு எந்த ஆவணங்களும் இல்லாததால், குழந்தை வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், சிறப்பு அனுமதியின் அடிப்படையில் எனது மகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது' என்று தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகள் சகிப்புத்தன்மை ஆண்டாக கடைபிடிக்கிறது.


அந்த அடிப்படையில், அந்நாடு அளித்த சிறப்பு அனுமதியின் அடிப்படையில், கிரண் பாபு அவரது மகளுக்கு பிறப்புச் சான்றிதழைப் பெற்றுள்ளார். தலைமை நீதிபதிக்கு அவர் அனுப்பிய விண்ணப்பக் கடிதத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததையடுத்து, ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் முதன்முறையாக இந்து தந்தைக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு தற்போது பிறப்புச் சான்றிதழ் கிடைத்துள்ளது.