இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து - சீதாராம் யெச்சூரி மீது பாபா ராம்தேவ் புகார்

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து - சீதாராம் யெச்சூரி மீது பாபா ராம்தேவ் புகார்

இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது யோகா குரு பாபா ராம்தேவ் புகார் அளித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி பங்கேற்று பேசினார். அப்போது அவர், "இந்துக்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்து மத இதிகாசங்களான ராமாயணமும், மகாபாரதமும் வன்முறையால் நிரம்பியுள்ளன" எனக் கூறினார்.

அவரது இந்தக் கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், யெச்சூரியின் இந்தக் கருத்து, இந்து மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கூறி உத்தராகண்டில் உள்ள ஹரித்துவார் மாவட்ட எஸ்.பி.யிடம் யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று புகார் மனு அளித்தார். இதன்பேரில், சீதாராம் யெச்சூரி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.