இலங்கையில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து உயிரிழந்த தீவிரவாதிகளின் கடைசி வீடியோ - சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது

இலங்கையில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து உயிரிழந்த தீவிரவாதிகளின் கடைசி வீடியோ - சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது

பாதுகாப்பு படை சுற்றி வளைத்ததால் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்த தீவிரவாதிகளின் கடைசி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து போலீஸாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து நாடு முழுவதும் தீவிரவாதிகளை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டம் கல்முனை அருகே சாய்ந்த மருது பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தெரிந்து போலீஸார், பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இதனையறிந்த தீவிரவாதிகள் வெடி குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதலை நடத்தினர். இதில், வீட்டில் இருந்த 3 பெண்கள், 6 குழந்தைகள் உட்பட 15 பேர் இறந்தனர்.

வெடிகுண்டுகளை வெடிக்க செய்வதற்கு முன்பு இரு சகோதரர்கள் சைனி ஹாஷிம், ரில்வான் ஹாஷிம், தந்தை முகமது ஹாஷிம் ஆகியோர் பேசிய வீடியோ வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சிறிய குழந்தை அழும் சத்தம் தொடர்ந்து கேட்டு கொண்டே இருக்கிறது. இரு சகோதரர்களில் ஒருவர், 5 வயது சிறுவனை மடியில் உட்கார வைத்து கொண்டு ஒரு கையில் துப்பாக்கியுடன் பேசுகிறார்.

அந்த வீடியோவில் தந்தையும் இரு சகோதரர்களும் பேசியிருப்பதாவது: எங்களை நெருங்கிவிட்டார்கள் இன்ஷா அல்லா, அவர்களுக்கு தகுந்த பாடத்தை மிக விரைவில் புகட்டுவோம். எங்களது முஸ்லீம்களை அழித்தொழிக்கும் இந்த காவிகளுக்கு தகுந்த பாடம் புகட்டி ரோமிக் கொடி நாட்டுவோம் இன்ஷா அல்லா. நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்துவிட்டார்கள். இந்த பாதை நின்று போகாது. நிச்சயமாக இதுதொடரும். எல்லா வழிகளிலும் நாங்கள் தொடருவோம். நாங்கள் கொல்லப்பட்டாலும் ஒவ்வொரு இடங்களிலும் குண்டு வெடிக்கும்.

நீங்கள் கைவிட்டுவிடாதீர்கள். உறுதியாக இருங்கள். ரக்பி உதவி செய்வார். நிச்சயமாக எங்களுடைய படை வெற்றி பெறும். தொழில் அனைத்தையும் விட்டு ஜிகாத் பயணத்துக்கு வந்தோம். எங்களுடைய சோதாக்களுடைய மூன்று மனைவிகள் இருக்கிறார்கள். அவர்களுடைய கணவன்மார்கள் சொர்க்கத்தில் சந்தித்து கொள்வார்கள் இன்ஷா அல்லா. இவ்வாறு அவர்கள் பேசியுள்ளனர்.

வீடியோ பேசியதை தொடர்ந்து, குண்டு வெடிக்க செய்தததில் மூவர் உட்பட வீட்டில் இருந்த 15 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயந்திரத்தனமாக..

இந்த வீடியோவில் பேசியவர்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை. பதற்றம், பயம் எதுவும் இல்லை. இது தங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு வேலை என்பது போல் இயந்திரத்தனமாக பேசுகின்றனர். தற்கொலைப் படையாக மாறவோ அல்லது வெடிகுண்டு தாக்குதல் நடத்தவோ வேறு யாரோ மூளைச் சலவை செய்திருந்தாலும், இன்னும் சிறிது நேரத்தில் அனைவரும் உயிரிழக்க போகிறோம் என்ற பயம் சிறிதேனும் அவர்களிடத்தில் வெளிப்பட்டிருக்கும். ஆனால், வீடியோவில் பேசும் வயதானவர் உட்பட 3 பேரிடமும் அப்படிப்பட்ட எந்த சலனமும் தெரியவில்லை. இதுதான் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.