இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி - தவ்ஹித் ஜமாத் உள்ளிட்ட 2 தீவிரவாத அமைப்புகளுக்கு தடை

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி - தவ்ஹித் ஜமாத் உள்ளிட்ட 2 தீவிரவாத அமைப்புகளுக்கு தடை

இலங்கையில் கடந்த வாரம் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலாயங்கள், ஹோட்டல்களில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட நிலையில்,  ஐஎஸ் அமைப்போடு தொடர்பில் இருந்து, இலங்கையில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு தடை விதித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.

மற்றொரு அமைப்பான ஜமாதி மிலாது இப்ராஹிம்(ஜேஎம்ஐ) ஆகியவையும் ஈஸ்டர் தற்கொலைப்படைத் தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என இலங்கை அரசு சந்தேகித்தது. இதனால், அந்த அமைப்புக்கும் சேர்ந்து தடைவிதித்துள்ளது. இந்த இரு அமைப்புகளின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த வாரம் ஈஸ்டர் பண்டிகையின் போது நீர்கொழும்பு, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய நகரங்களில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்களில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காமல் இருந்த நிலையில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சிலர் இந்த செயலைச் செய்துள்ளனர் என்று ஐஎஸ் அமைப்பு தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு மூளையாக இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத்  மற்றும் ஜமாதி மிலாது இப்ராஹிம் ஆகிய இரு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இலங்கை அரசுக்கு கிடைத்தன.

குறிப்பாக தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரன் ஹசிம் இதற்கு மூளையாக இருந்தார் என்பது தெரியவந்தது. ஆனால், இந்த தாக்குதலில் முதலில் ஹசிம் கொல்லப்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில், மனித வெடிகுண்டாக மாறி இறந்துவிட்டார் என்று அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக இலங்கை அரசு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்து சந்தேகத்திடமானவர்களை கைது செய்து வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாகவும், தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்போடு தொடர்பில் இருந்தவர்கள் என இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை அரசு கைது செய்துள்ளது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு இலங்கை அதிபர் சிறிசேனா ஒர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், " இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் தேசிய தவ்ஹித் ஜமாத், ஜமாதி மிலாது இப்ராஹிம் ஆகிய இரு இஸ்லாமிய அமைப்புகள் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.  இந்த இரு அமைப்புகளும் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஆதலால் இரு அமைப்புகளின் செயல்பாட்டை முடக்கி, அனைத்துவிதமான சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்ய உத்தரவிடுகிறேன். மேலும், இலங்கையில் செயல்படும் மற்ற தீவிரவாத அமைப்புகளையும் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் " எனத் தெரிவித்துள்ளார்.