இலவசங்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு? - சென்னை உயர்நீதிமன்றம்

இலவசங்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு? - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பும் அதோடு வழங்கும் ரூ.1000/- வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இலவச அரிசி பற்றாக்குறையால் தான் அரிசிக்கு பதில் சர்க்கரை வேண்டுவோர் அதனை பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டிருப்பதாகவும், சர்க்கரை வாங்குவோர் அனைவரும் வசதி படைத்தவர்கள் அல்ல என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சர்க்கரை அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அனுமதியளித்தது. ஆனால், தமிழக அரசுடன் இலவசங்கள் குறித்து பல கருத்துக்களை தெரிவித்ததோடு, கேள்விகளையும்  நீதிமன்றம் எழுப்பியுள்ளது. 

*பொங்கல் பரிசு என்று கூறி கொடுக்கப்படும் பணத்தை மக்கள் ஓட்டுக்காக கொடுக்கப்ப்டுவதாகவே மக்கள் கருதுகின்றனர்.

*இலவசமாக கொடுக்கப்படும் அரிசி அதிகளவில் வெளிமாநிலங்களுக்கு கடத்தபடுகிறது. இதனை தடுக்க அரிசிக்கு குறைந்தபட்ச விலையை ஏன் அரசு நிர்ணயிக்க கூடாது.

*மக்களுக்கு நிறைய இலவசங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை வரைமுறை படுத்த வேண்டும்.

*இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இலவசங்களை கொடுக்க முடியும். இலவசங்களை படிப்படியாக குறைப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

*அப்படியே குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- தருவதாக இருந்தாலும் அதனை அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தாமல் மணி கணக்கில் அவர்களை ரேஷன் கடைகள் முன் நிற்க வைப்பது ஏன்?

என்ற கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.