உலக புகழ் பெற்ற மரகத நடராஜரை கடத்த முயற்சி

உலக புகழ் பெற்ற மரகத நடராஜரை கடத்த முயற்சி

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் மங்களாம்பிகை சமேத மங்களநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐந்தரை அடி உயர  மரகதத்தால் ஆன நடராஜர் சிலை உள்ளது. வெளியிலிருந்து வரும் அதிர்வலைகளால் இந்த சிலைக்கு பாதிப்பு ஏற்ப்படக்கூடாது என்பதால் ஆண்டு முழுவதும் சந்தன காப்பு சாத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. வருடத்தில் ஒரே ஒரு முறை மார்கழி திருவாதிரை நாளன்று மட்டும் சந்தன காப்பு களையப்பட்டு பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த இந்த சிலையை கடத்த சிலர் நேற்று  முயன்றுள்ளனர். கோவில் சுற்றுசுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கோவில் காவலாளி செல்லமுத்துவை தாக்கியுள்ளனர். பின்னர் மரகத சிலையை அவர்கள் திருட முயன்ற போது கோவிலில் பொருத்தபட்டிருந்த அபாய மணி ஒலித்ததால் மர்ம நபர்கள்  சிலையை திருடாமல் விட்டுவிட்டு ஓடி விட்டனர். 

காவலாளி செல்லமுத்து ராமநாதபுரம் அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடத்தல் முயற்சி நடைபெற்ற உத்திரகோசமங்கை கோவிலில் ராமநாதபுர சமஸ்தான திவான் வி.கே.பழனிவேல் பாண்டியன், கோவில் செயல் அலுவலர் எம்.ராமு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உத்திரகோசமங்கை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.