உள்நாட்டில் தயாரான தனுஷ் பீரங்கி

உள்நாட்டில் தயாரான தனுஷ் பீரங்கி

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள பீரங்கி தயாரிப்புத் தொழிற்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 6 "தனுஷ்' ரக பீரங்கிகள் முறைப்படி நேற்று, ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன. 

மொத்தம் 114 தனுஷ் பீரங்கிகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை ராணுவமும், பாதுகாப்புத் துறை அமைச்சகமும், தளவாட தொழிற்சாலை வாரியத்துக்கு வழங்கியுள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாராகியுள்ள, இந்த பீரங்கி, 38 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை, துல்லியமாக தாக்கும் திறன் உடையது. ஒரு பீரங்கியின் விலை, 14 கோடி ரூபாய்.இந்த பீரங்கியின் சோதனை, பல கட்டங்களாக நடந்தன. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, முதல் கட்டமாக, ஆறு பீரங்கிகள், மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில், நேற்று நடந்த விழாவில், முறைப்படி ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பீரங்கி, தானியங்கி முறையில் இயங்கக்கூடியது. எந்தவிதமான வானிலையிலும் இந்த பீரங்கியை இயக்க முடியும். எடை குறைவு என்பதால், சமதளமற்ற சாலைகள், மலைகள் மற்றும் பாலைவனப் பகுதிகளிலும், இந்த பீரங்கிகளை எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்று  ராணுவ அதிகாரிகள் கூறினர்.