எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் நவீன மருத்துவ சிகிச்சை வசதிகள்!

எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் நவீன மருத்துவ சிகிச்சை வசதிகள்!

சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் நவீன இதய அறுவை சிகிச்சை அரங்கம், மரபணு – மூலக்கூறு ஆய்வகம், மரபணு குறைபாடு சிகிச்சைத்துறை மற்றும் தைராய்டு பரிசோதனை திட்டம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை (பேபி ஆஸ்பிடல்), 1968ல் 250 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டு, இப்போது 837 படுக்கைகளுடன் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் புதிய நவீன மருத்துவ சிகிச்சை வசதிகளை, குழந்தைகள் தினமான iஇன்று,  முதல்வர் பழனிசாமி துவக்கிவைத்தார்.

ரூ.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன இதய அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மரபணு – மூலக்கூறு ஆய்வகம் மற்றும் அரிய மரபணு சிகிச்சைத்துறை ஆகியவற்றையும், குழந்தைகளின் பெற்றோர் 250 பேர் வரை அமர்வதற்கும், பயனுள்ள நிகழ்ச்சிகள்; கார்ட்டூன் படங்கள்; குறும்படங்களை குழந்தைகள் கண்டுகளிப்பதற்கும் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஒலி–ஒளி அரங்கத்தையும் முதல்வர் துவக்கிவைத்தார்.

மேலும், மரபியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வகை செய்யும், பச்சிளம் குழந்தைகளுக்கான தைராய்டு பரிசோதனை திட்டத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார்.