ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு

ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு

சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐக்கு மாற்ற தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து யானை ராஜேந்திரன், மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோரால் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில்  இருந்த சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐக்கு மாற்றும் தமிழக அரசின் முடிவு சில அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் காப்பாற்றவே என்று இந்த வழக்கில் வாதிடப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் சிலைகடத்தல் வழக்குகளை சி.பி.ஐக்கு மாற்ற இடைக்கால தடை விதித்தது. 

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 

சிலைகடத்தல் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் இன்று ஓய்வு பெறுகிறார். அந்த பதவிக்கு ஏ.டி.ஜி.பி அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பில் சி.பி.ஐக்கு மாற்றும் அரசு ஆணையை ரத்து செய்தும், ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு குழுவினருக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கியும் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தின்  இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், தன் கடமையை சரியாக நிறைவேற்றுவேன் என்றும் அவர் கூறினார்.