ஐ.நா.,வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்

ஐ.நா.,வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்

'ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தவேண்டும். இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் போன்றவை அதில் நிரந்தர உறுப்பினர்களாக இடம்பெறுவது அவசியம்' என பிரான்ஸ் கூறியுள்ளது. 

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து முடிவு எடுக்கும் ஐக்கியநாடுகள் சபையின் முக்கிய அமைப்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அமைந்துள்ளது. இதில் 15 நாடுகள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெற்றுள்ளன.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்; எங்களுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க வேண்டும்' என நம் நாடு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய நம் நாட்டின் துாதர் சையது அக்பருதீன் 'ஐ.நா.,வில் உறுப்பினர்களாக உள்ள 122 நாடுகளில் 113நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 'மாறிவரும் சூழ்நிலைகள் பாதுகாப்பு பிரச்னைகளை முன்னிறுத்தி இதை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார். 

தற்போதுள்ள சர்வதேச நிலவரம் மற்றும் உலகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும் என்பதே பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கொள்கையாக உள்ளது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், பிரேசில் போன்ற நாடுகள், கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இடம் பெறுவது மிகவும் அவசியம். இதுதான் தற்போதைக்கு முன்னுரிமை உள்ள பிரச்னை. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வது மிகவும் அவசியம். இதை உடனடியாக செய்ய வேண்டும் என்பதில், பிரான்ஸ் உறுதியாக உள்ளது என ஐ.நா.,வுக்கான பிரான்ஸ் துாதர் பிராங்கோயிஸ் டெலாத்ரே கூறினார்.