ஒவ்வொரு கட்டத் தேர்தலிலும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அதிகரிக்கிறது - ராம்விலாஸ் பாஸ்வான்

ஒவ்வொரு கட்டத் தேர்தலிலும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அதிகரிக்கிறது - ராம்விலாஸ் பாஸ்வான்

மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவிலும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விழும் வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. மோடி அலை வாராணசி, ஜார்க்கண்டில் அண்மையில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் நிரூபணமானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பலர் சேர்ந்து வருகிறார்கள். ஆனால் மறுபக்கத்தில், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் தில்லியிலும் சரி, பிகாரிலும் சரி ஒற்றுமை இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால், அக்கட்சிகள் என்ன பணி செய்யும் என மக்களுக்கு தெரியவில்லை. 

கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களைக் காட்டிலும் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்புகிறேன். மக்களவைத் தேர்தலில் பயங்கரவாதம், தேசியவாதம் ஆகியவை முக்கிய விவகாரங்களாக விவாதிக்கப்படுகிறது. அதேபோல் வளர்ச்சி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு மக்கள் அதிக அளவில் ஆதரவு அளிக்கின்றனர். 

பயங்கரவாதத்தை ஒழித்து கட்டுவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பொய்யான பிரசாரம் செய்து வருகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று அக்கட்சிகள் தெரிவிக்கின்றன என்று கூறினார்.