'கஜா' புயல் பாதிப்புகளுக்கு தமிழக அரசு நடவடிக்கைகள். - முதலமைச்சர் பேட்டி

'கஜா' புயல் பாதிப்புகளுக்கு தமிழக அரசு நடவடிக்கைகள். - முதலமைச்சர் பேட்டி

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் ‘கஜா புயல் பாதிப்புகள் குறித்தும், அதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் என் தலைமையில், மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வடகிழக்கு பருவமழை காலத்தில் எவ்வாறு பணிகள் மேற்கொள்வது என்பதையெல்லாம் அதிகாரிகளிடத்திலே தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டு அதனடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கஜா புயலினால் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் பகுதிகளில் மழை பெய்தது. அதிகாலை சுமார் 2.30 மணியளவிலே 110 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது. இதனால், நாகை மாவட்டம் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இதுவரை 11 பேர் இறந்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.

எனினும், சேத மதிப்பு எவ்வளவு என்று இன்னமும் தெரியவில்லை.  சேத மதிப்பு கணக்கிட ஆணையிடப்பட்டு, அதனுடைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாங்கள் ஏற்கனவே கஜா புயலின் வருகை குறித்து எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வது என்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புயல் வருவதற்கு முன்பாகவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கின்றவர்கள், குடிசையில் வசிக்கின்றவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக 471 முகாம்களில் சுமார் 82,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த காரணத்தினாலே உயிர்சேதமும், மக்களுக்கு பாதிப்புகள் ஏதும் இல்லாமலும் அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது.

இன்று மாலை வரை மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கின்றது. ஆகவே, அவர்களுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வானிலை சீரடைந்த பின்னர் முகாம்களில் உள்ளவர்கள் அவரவர் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தற்போது வரை, 11 பேர் உயிரிழந்திருப்பதாக மாவட்ட ஆட்சியாளர் மூலமாக அரசுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.  உயிரிழந்த குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும்சிறு காயம் அடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும்.புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக நடமாடுகின்ற 405 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் கணக்கிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கணக்கிடப்பட்டபின் நான் சென்றால்தான் அவர்களுக்கு  முறையாக அவர்களுக்கு நிவாரணம்  வழங்கப்படும். ஏனென்றால்ஊடகத்தின் மூலமாகத்தான் நாங்களே எவ்வளவு சேதம் அடைந்திருக்கிறதுபணிகள் எவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏற்கனவே கஜா புயலால் மின்கம்பங்கள் ஏதாவது சாய்ந்தால் அதை மாற்றியமைப்பதற்கு, சுமார் 7000 மின்கம்பங்கள் அங்கேயே இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுது எத்தனை மின்கம்பங்கள் கஜா புயலால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பது கணக்கிடப்பட்டு, அதையெல்லாம் சரி செய்வதற்குண்டான நடவடிக்கையை மின்சார வாரியம் எடுத்து வருகின்றது.


மீனவர்களின் பாதிப்புகள் குறித்தும்  கணக்கிடப்பட்டு வருகிறது. இன்று காலைதான் புயல் கரையை கடந்திருக்கிறது. மீன்வளத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளெல்லாம் சென்றிருக்கிறார்கள். கரையோரமாக வைக்கப்பட்டிருந்த படகுகள் சில பாதிக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அதை மீன்வளத் துறையும், வருவாய்த் துறையும் சேர்ந்து, எவ்வளவு சேதம் அடைந்திருக்கிறது என்பதையெல்லாம் கணக்கிட்டு, அரசுக்கு அறிக்கை கொடுத்த பிறகு, அதற்கான நிவாரணம் மீனவ மக்களுக்கு வழங்கப்படும்.

அதே நேரத்தில், கஜா புயலால் அதிக மரங்கள் சாய்ந்திருக்கின்றன. அப்படி சாய்ந்த மரங்களையெல்லாம் அகற்றுகின்ற பணியில் அதிகாரிகள் அதிகாலையிலிருந்தே ஈடுபட்டிருக்கின்றார்கள். அதற்கு தேவையான நவீன  இயந்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன் மூலமாக, சாலையில் சாய்ந்திருக்கின்ற மரங்களையெல்லாம் அறுத்து, அதை அப்புறப்படுத்துகின்ற பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதேபோல, பொதுப்பணித் துறையில் இருக்கின்ற அதிகாரிகளும் அங்கே அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அங்கே உள்ள குளங்கள், ஏரிகளை பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து பணிகளை மேற்கெள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு, அதன் அடிப்படையிலே அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து அந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஏற்கனவே, மாண்புமிகு அம்மாவினுடைய அரசு கஜா புயலால் கடற்கரை ஓரங்களில் உள்ள மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்பதற்காக 3 நாட்களுக்கு முன்பே மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டு, அவர்களின் மேற்பார்வையில் அந்தப் பணிகளெல்லாம் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் அவர்கள் இரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறையிலேயே தங்கி நேரடியாக கடலோர மாவட்ட ஆட்சியாளர்களிடத்தில் தொடர்பு கொண்டு புயலால் பாதிக்கப்பட்ட விவரங்களையும், மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய பணிகள் விவரங்களையும் உடனுக்குடன் எங்களுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தார். நாங்களும்  உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி, நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த இயற்கை சீற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு வடகிழக்கு பருவமழையை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், அனைத்துத் துறைகளுக்கும் நாங்கள் அறிவுரை வழங்கியிருக்கின்றோம். அந்தந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அங்கே முகாமிட்டு, அமைச்சர் பெருமக்களும் முகாமிட்டு, எங்களால் நியமிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் அங்கேயே தங்கி தகுந்த நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தேவையான உதவிகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு செய்யும். கஜா புயல் மிகவும் தீவிரமாகவுள்ளதால், ஒரு சில பகுதிகளில் அதிக சேதாரம் ஏற்பட்டுள்ளது.

உள் மாவட்டங்களைப் பொறுத்தவரை மிதமான மழை தான் பொழிகிறது. சில இடங்களில் கனமழை பொழிகிறது. மிக கனமான மழை பொழிந்தால்தான் மக்கள் பாதிப்பிற்குள்ளாவார்கள். வானிலை ஆராய்ச்சி மையம் மழையை மிதமான மழை, கனமான மழை மற்றும் மிகக் கனமான மழை என்று மூன்று விதமாக வரையறுத்து வைத்திருக்கின்றார்கள். ஆகவே, மத்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தகவலின் அடிப்படையில், அதிகம் பாதிப்பில்லாத மாவட்டங்களுக்கு தேவையான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிப்புக்குள்ளாகின்ற மாவட்டங்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது, மாவட்ட ஆட்சித் தலைவர்களால் தேவையான நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.

சேதங்கள் பற்றி கணக்கிட்டு, அரசு மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்படும். ஏற்கனவே, வார்தா புயலின் போது நாமும் சேத மதிப்பீடு கொடுத்தோம். அதற்கு குறிப்பிட்ட அளவுதான் நிதி ஒதுக்கினார்கள், மாநில அரசின் நிதியில்தான் நாம் செலவழித்துக் கொண்டிருக்கின்றோம்.

வேதாரண்யம் பகுதி எந்தத் தொடர்பும் இல்லாமல், தனித் தீவாக மாறியுள்ளதாகச் சொல்கிறார்கள், அங்கும்  வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, மின்சார வாரியத் துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை என பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் எல்லாம் அனுப்பி வைக்கப்பட்டு, சேதங்களை மதிப்பிட்டு, அதற்கேற்றவாறு, அதற்குத் தேவையான பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு முழு வீச்சுடன் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளளபடும், நிவாரணங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.