'கஜா'வ  சமாளிச்ச நீ தான் 'மாஸ்' தமிழக அரசுக்கு எதிர்கட்சிகள்

'கஜா'வ சமாளிச்ச நீ தான் 'மாஸ்' தமிழக அரசுக்கு எதிர்கட்சிகள்

கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு மேற்கொண்ட உஷார் நடவடிக்கைகளை பிரதான எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் பாராட்டியுள்ளன.

 திமுக தலைவர் ஸ்டாலின் : கஜா புயல் குறித்த வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை வெளியானவுடன், தமிழக பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது. அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு தந்திட வேண்டும். புயல் பாதித்த பகுதிகளில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சென்று, மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். உடுப்பணியாத ராணுவம் போல களமிறங்கி, அரசு தரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

 தமிழக பாஜ தலைவர் தமிழிசை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் எல்லாருக்கும், நாம் நம்மாலான உதவிகளை செய்ய வேண்டும். புயல் எச்சரிக்கை வந்த காலத்தில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல்வருக்கும், களத்தில் இறங்கி பணிபுரிந்த அமைச்சர்கள், அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை குழுவுக்கும் பாராட்டுகள். பாதுகாப்பு பணிகள் தொடர வேண்டும். பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட பணிகளில் பாஜ தொண்டர்கள் ஈடுபட வேண்டும்.

 தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் : கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது. தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். காங்., நிர்வாகிகளும் தொண்டர்களும், மக்களுக்கான நிவாரணங்களில் தங்களால் இயன்ற உதவிகளையும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

 பாமக நிறுவனர் ராமதாஸ் :  கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். களப்பணிக்கு அனுப்பப்பட்ட அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கவை. புயலால் ஏற்பட்டுள்ள மிகஅதிக சேதங்களை சீரமைத்து இயல்பு நிலையை மீட்க வேண்டியது அவசர தேவை. இயல்புநிலை திரும்பும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்.

 மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் : தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, ஓகி புயல் சூழலைப் போன்ற பிரச்னை தவிர்க்கப்பட்டது. பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு பணிகள் பாராட்டுக்குரியவை. மக்களின் வாழ்வாதாரத்தை பழைய நிலைமைக்கு மீட்டெடுக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 இந்திய கம்யூ., மாநிலச் செயலாளர் முத்தரசன் : கஜா புயல் நிவாரண நடவடிக்கைக்களை அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். இந்தியக் கம்யூ., கட்சியினர் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

 மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் : நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாக கொண்டு, இப்போது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் கலெக்டர்களின் அயராத பணி போற்றத்தக்கது. அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், ஊடகங்கள், தன்னார்வலர்கள் எல்லாருக்கும் பாராட்டுக்கள். பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்து கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்ய களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிட வேண்டும்.