கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்துக்கு அமைதிக்கான காந்தி விருது

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்துக்கு அமைதிக்கான காந்தி விருது

விவேகானந்தா கேந்திரம், அக்ஷய பாத்ரா அமைப்பு, சுலப் இன்டர்நேஷனல், எகல் அபியான் அறக்கட்டளை, யோஹெய் சஸாகாவா அமைப்பு ஆகியவற்றுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தி அமைதி விருதை செவ்வாய்க்கிழமை வழங்கினார். 

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம், அக்ஷய பாத்ரா ஆகிய அமைப்புகள் 2015-ஆம் ஆண்டில் காந்தி அமைதி விருதுக்கு இணைந்து தேர்வு செய்யப்பட்டது. சுலப் அமைப்பு 2016ஆம் ஆண்டுக்கான அமைதி விருதுக்கும், எகல் அமைப்பு 2017ஆம் ஆண்டுக்கான அமைதி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டன. 2018ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு யோஹெய் சஸாகாவா அமைப்பு தேர்வு செய்யப்பட்டது. 

மனித விடுதலைக்காக அமைதியுடன் போராடி ஜெயித்துக் காட்டியவர் மகாத்மா காந்தி. சமூக உரிமைகளுக்காகப் போராடிய அமெரிக்காவின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான மார்டின் லூதர் கிங், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, போலந்தின் முன்னாள் அதிபரான லேக் வலேசா ஆகியோர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் கவர்ந்து இழுக்கப்பட்டவர்கள். சமத்துவமின்மைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக காந்தியின் சிந்தனைகள் அமைந்துள்ளன.

சமகால மனிதகுல வரலாற்றில் அவரது சிந்தனைகள் ஈடு இணையில்லாத ஒன்றாக விளங்குகிறது. ஐ.நா. அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள், காந்திஜியின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு, தூய்மை இந்தியா திட்டம் ஆகியவற்றிலும் காந்திஜியின் சிந்தனைகள் பிரதிபலிக்கின்றன. நாடு முழுவதிலும் குறிப்பாக பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சுய உதவி, வளர்ச்சி ஆகியவற்றை முன்னெடுத்தது விவேகானந்தா கேந்திரம்.

பசி, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை போக்குவதற்காக பாடுபட்டுவரும் அமைப்பு அக்ஷய பாத்ரா. எகல் அபியான் அமைப்பு 22 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கச் செய்தது. அவர்களில் 52 சதவீதம் பேர் பெண் குழந்தைகள் ஆவர். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டுவரும் வேளையில் அவரின் பெயரிலான விருதுகளை இந்த அமைப்புகள் பெற்றுள்ளன என்றார் ராம்நாத் கோவிந்த். காந்தி அமைதி விருதை இதற்கு முன்பு நெல்சன் மண்டேலா, செக்கோஸ்லேவியாவின் முன்னாள் அதிபர் வாக்லாவ் ஹாவெல் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். ராமகிருஷ்ண மிஷனுக்கும் இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.