கயத்தாறு அருகே கிராமங்களில் எதிர்ப்பு - பாதி வழியில் திரும்பினார் கனிமொழி

கயத்தாறு அருகே கிராமங்களில் எதிர்ப்பு - பாதி வழியில் திரும்பினார் கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை, தலையான் நடந்தான்குளம் ஆகிய கிராமங்களில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக வேட்பாளர் கனிமொழி பிரச்சாரம் செய்யாமல் திரும்பியுள்ளார். 

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமத்துக்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது, அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் சிலர் கனிமொழியிடம் வாக்குவாதம் செய்வது போன்றும், அவர் பிரச்சாரம் செய்யாமல் பாதி வழியில் திரும்புவது போன்றும் வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வாக்குவாதம் அந்த வீடியோவில் கனிமொழியிடம் இளைஞர்கள் சிலர் “கீதாஜீவன் (தூத்துக்குடி எம்எல்ஏ) இரு சமுதாயங்களுக்கு இடையே தேவையில்லாமல் பிரச்சினை ஏற்படுத்தி வருகிறார்” எனக் கூறுகின்றனர். இதற்கு கனிமொழி, “கீதாஜீவன் அப்படி எதுவும் கூறவில்லை” என்கிறார்.

அந்த இளைஞர்களோ, “எங்களிடம் அதற்கான ஆதாரம் உள்ளது” என்கின்றனர்.

இதேபோல், தலையால் நடந்தான் குளத்திலும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கும் பிரச்சாரம் செய்ய முடியாமல் கனிமொழி திரும்பும் வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.