கலக்கல் கலெக்டர்

கலக்கல் கலெக்டர்

திருவண்ணாமலை  கலெக்டர் கந்தசாமி  தன் மனித நேய குணத்தினால் முன்மாதிரி அதிகாரியாக திகழ்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆரணியில் பெற்றோரை இழந்து தவித்த மூன்று குழந்தைகளின் நிலையறிந்து அவர்களில் மூத்தவளான ஆனந்திக்கு வேலைக்கும் மற்ற இரண்டு பேருக்கும் கல்விக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.  இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

பின்னர், திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் பக்தர்களின் வசதிக்காக மரம் நடுவதற்கான இடங்கள் குறித்து ஆய்வு செய்ய தானே இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

இப்போது, பிள்ளைகளால் கைவிடப்பட்ட தம்பதிகளின் விவசாய நிலத்தை பிள்ளைகளிடமிருந்து மீட்டு அவர்களிடமே திருப்பி கொடுத்து பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் கலெக்டர் கந்தசாமி.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கர்ணன் பூங்கவனம் தம்பதியினருக்கு பழனி, செல்வம் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். கர்ணன் தான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாத்து வாங்கிய 5 ஏக்கர் நிலத்தை மகன்களுக்கு எழுதி வைத்து விட்டார். பின்னர், இரண்டு பிள்ளைகளும் பெற்றோருக்கு சரியாக சாப்பாடு கூட போடாமல் கொடுமை படுத்தி வந்துள்ளனர். தான் கொடுத்த நிலத்தில் சிறிய பகுதியை கொடுத்தால் அதில் விவசாயம் செய்து தானும் தன் மனைவியும் பிழைத்துக்கொள்வோம் என்று கர்ணன் தன் பிள்ளைகளிடம் கெஞ்சிப்பார்த்தார். ஆனால், அதற்கு ஒப்பு கொள்ளாதது மட்டுமல்ல நிலம் கேட்ட பெற்றோரை அடித்தும் உள்ளனர் பிள்ளைகள்.

நொந்து போன பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். பெற்றோரை மதிக்காத பிள்ளைகளுக்கு நல்ல பாடம் புகட்ட முடிவு செய்த கலெக்டர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து மொத்த 5 ஏக்கர் நிலத்தையும் மீண்டும் கர்ணன் பூங்காவனம் தம்பதியினர் பெயருக்கு மாற்றி கொடுத்துள்ளார்.

கலெக்டரின் இந்த நடவடிக்கை மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளதோடு, பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.