காங்கிரசின் கொடூர முகம் வெளிப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

காங்கிரசின் கொடூர முகம் வெளிப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

டில்லியில், 1984ல், அப்போது பிரதமராக இருந்த, காங்கிரசை சேர்ந்த இந்திரா, அவரது சீக்கிய பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, நாடு முழுவதும், சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் நடந்தது. இதில், 3,000க்கும் அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். 

இப்போது, லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், பா.ஜ., வெளியிட்ட தகவல் ஒன்றில், '1984ல், அப்போதிருந்த, காங்., தலைமையிலான மத்திய அரசே, மக்களை கொன்று குவித்தது. 'சீக்கியர்களை கொல்லச் சொல்லி, அப்போது பிரதமராக இருந்த, ராஜிவ் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது' என, கூறப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்து, காங்கிரசின், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவர், சாம் பிட்ரோடா, 'டுவிட்டரில்' தெரிவித்த கருத்தில், 'பா.ஜ.,வின் மற்றொரு பொய் இது. 1984-ல் நடந்தது பற்றி, இப்போது என்ன பேச்சு; நடந்தது, நடந்துவிட்டது. 'ஐந்து ஆண்டு கால ஆட்சியில் செய்த சாதனைகள் பற்றி, பா.ஜ.,வும், பிரதமரும் பேசட்டும்' என, கூறியிருந்தார். சாம் பிட்ரோடாவின் இந்த கருத்துக்கு, சீக்கிய தலைவர்கள் பலரும், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஹரியானா மாநிலம், ரோத்தகில், நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ், ஒரு குடும்பத்திற்கான கட்சி. ஒரு குடும்பத்தை காப்பாற்றவே, அந்த கட்சி பாடுபடுகிறது. 1984ல், சீக்கியர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தது, காங்கிரஸ். டில்லி, ஹரியானா, மத்திய பிரதேசம், ஹிமாச்சல், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 3,000க்கு அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், ராகுலின் குருவோ, 'நடந்தது, நடந்து விட்டது' என, அலட்சியமாக கூறுகிறார்.

காங்கிரசுக்கு, மக்களின் உயிர், சாதாரணமாக போய் விட்டது. சீக்கியர்களை கொன்றதை நியாயப்படுத்தி, தன் கொடூர முகத்தை, காங்., வெளிப்படுத்தி உள்ளது. பா.ஜ., நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ளது; நாட்டு வளர்ச்சிக்காக பாடுபடுகிறது. ராணுவ வீரர்கள் குறித்து, காங்.,கிற்கு அக்கறை கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தன் டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், 'சீக்கியர்கள் படுகொலையை நியாயப்படுத்தியுள்ள தன் குருவை, ராகுல், கட்சியிலிருந்து நீக்குவாரா' என, கேள்வி எழுப்பியுள்ளார்.