காங்கிரஸ் கட்சி ஏன் ரஃபேல் போர் விமானத்தை பற்றியே பிரச்சாரம் செய்கிறது?

காங்கிரஸ் கட்சி ஏன் ரஃபேல் போர் விமானத்தை பற்றியே பிரச்சாரம் செய்கிறது?

.காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து ரஃபேல் போர் விமானம் கொள்முதல் செய்தததையே விமர்சனம் செய்து கொண்டிருக்கிறது.  உச்ச நீதி மன்றம் தெளிவாக தீர்ப்பு கூறிய பின்னரும்,  ராகுல் காந்தி அன் கோ வினர் ஏன் ரஃபேல் புராணத்தையே பாடுகிறார்கள்?   உண்மை கசக்கும் அல்லது சுடும்.  ஏன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒப்பந்தத்தை இறுதி செய்யவில்லை என்பதற்கான காரணத்தை இதுவரை முன்னாள் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோனியும் விவரிக்கவில்லை.  பொருளாதரா மேதை ப.சிதம்பரமும் விளக்கம் கொடுக்கவில்லை.   ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 42 ஸ்குவாட்ரனாக இருந்த விமானப் படை பிரிவுகள், படிப்படியாக குறைந்து 2014-ல் 32 ஸ்குவாட்ரன் ஆக்கப்பட்டது ஏன் என்பதற்கு சரியான விளக்கத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கூறுவார்களா என்பதையும் இந்நிலையில் கேள்வி கேட்க வேண்டும்.

       சரி பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் ராணுவத்தின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்தார்கள் என்பதை விரிவாக ஆய்வு செய்யலாம்.   சில தினங்களுக்கு முன் பொருளாதர மேதை ப.சிதம்பரம் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.  126 விமானங்கள் வாங்குவதற்கு பதிலாக 36 விமானங்கள் வாங்க வேண்டிய அவசியம் என்ன?  காங்கிரஸ் ஆட்சியில் போடாத ஒப்பந்தத்தின் ஷரத்துக்களில்,  18 விமானங்கள் பிரான்சில் தயாரிக்கப்பட்டு, முதல் விமானம் 2019 இறுதியிலும், 17 விமானங்கள் 2022க்குள் சப்ளை செய்யும் என்றும், மீதி 108 விமானங்கள் பெங்களுர் இந்துஸ்தான் ஏர்நாட்டிக்ஸ் லிமிடெட் மூலம் தயாரிக்கப்படும் என்ற ஷரத்து இருந்தது உண்மையா என்பதை முதலில் குற்றச்சாட்டை முன் வைக்கும் ராகுல் காந்தியும், அன்றைய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோனியும் விளக்க வேண்டும்.  ஆனால் மோடி அரசானது 2019 இறுதிக்குள் 36 விமானங்களும் பயன்படக்கூடிய நிலையில் வாங்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டு விமர்சனங்களை எழுப்ப வேண்டும்.   முந்தைய ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தில், ரஃபேல் தசால்ட் நிறுவனம், ஹெச்.ஏ.எல். தயாரிக்கும் ரஃபேல் விமானங்களில் பழுதோ அல்லது பிரச்சனையோ ஏற்பட்டால், தசால்ட் நிறுவனம் பொறுப்பேற்காது என தெளிவாக கூறியதால், ஒப்பந்தம் ஏற்படவில்லை.

       ஏன் ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு வழங்கப்படாமல், மோடி தனது நண்பரான அம்பானிக்கு கொடுத்துள்ளதாக ப.சிதம்பரம் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.  யாருடைய ஆட்சியில் அம்பானிக்கு கோடிக்கணக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன என்பதை முழு விவரங்களுடன் விவாதம் செய்ய முன் வந்தால், காங்கிரஸ் ஆட்சியில் அம்பானியின் திருட்டு தனத்திற்கு கூட உடந்தையாக இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்பது நன்கு தெரியும்.  வெறும் சைக்கிள் வைத்து துணியும், டிடர்ஜென்ட் சோப்பும் விற்றுவந்த அம்பானி பெரிய தொழிலதிபராக மாறியது இந்திரா காந்தியின் ஆட்சியில் தான். காங்கிரஸ் கட்சியின் பிரதமராக இருந்த நரசிம்மராவ் மற்றும் ராஜீவ் காந்தியின் ஆட்சியில் அம்பானி கொடி கட்டி பறந்தார்.  காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் எண்ணெய் மற்றும் உரக் கொள்கைகள் அம்பானியின் அலுவலகத்தில் வரைவு செய்யப்பட்டது என்பது உலகறிந்த விஷயமாகும்.  ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய ஆர்டரை, அனுபவமே இல்லாத அம்பானியின் நிறுவனத்திற்கு ஏன் வழங்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பும் காங்கிரஸ் கட்சியினர், மன்மோகன் சிங் ஆட்சியில், அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு அனுபவமே இல்லாத போது, டெல்லி விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் ஆர்டரை ஏன் வழங்கினார் என்பதற்கு விளக்கம் கொடுக்க முடியுமா?   மோடி மீது குற்றம் சுமத்தும் ப.சிதம்பரம், பி.எஸ்.என்.எல். இருக்கும் போது ஏன் ஏர்டெல், வோடஃபோன், ஜியோ என்று பல நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது என்பதற்குறிய காரணங்களை கூற முடியுமா?

         திருவாளர் ராகுல் காந்திக்கு முந்தைய ஆட்சியில் நடந்த சில நிகழ்வுகளை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.  ஹெச்.ஏ.எல். நிறுவனம் ஆண்டாண்டு காலமாக ஹெலிகாப்டர்களை தயாரித்து வரும் போது, அகஸ்தா வெஸ்ட்லேண்டு  இத்தாலி நிறுவனத்திடம் ஹெலிகாப்டர்கள் வாங்கியது ஏன் என்ற கேள்விக்கு முழுமையான பதில் கொடுக்க வேண்டும் அல்லது விளக்க வேண்டும்.    காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு பேரங்களில் RM க்கு பதிலாக ( ரக்ஷா மந்திரி)  RV   ( ராபர்ட் வதோர ) ஈடுபட்டு வந்து உலகிற்கே நன்கு தெரியும்.   ரஃபேல் விமான பேரத்தில் ராபர்ட் வதோராவின் திட்டம் பலிக்கவில்லை என்பது உண்மையா?   யு.பி.ஏ. ஆட்சியில் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தசால்ட் நிறுவனத்துடன் பேரம் பேசினார்.  ஆனால் தசால்ட் நிறுவனம் சஞ்சய் பண்டாரியுடன் பேச மறுத்து விட்டார்கள்.  ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டார் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதோராவின் நெருங்கிய நன்பர்.  2009 அக்டோபர் மாதம் ஆயுத வியாபாரி சஞ்சய பண்டார்,  ராபர்ட் வதோராவிற்காக லண்டனில் ரூ19 கோடி மதிப்புள்ள பங்களா வாங்கி கொடுத்துள்ளார்.  இது எதற்காக என்பதை ராகுல் காந்தி பொது மக்களிடம் விவரமாக விளக்குவாரா?  வாங்கி கொடுத்த பங்களாவின் விலாசம் 12, எலரடன் ஹவுஸ் பிராந்தன் ஸ்குயர்.  லண்டன்.  இந்த மகா பெரிய மோசடி ஆயுத வியாபாரிக்கு தசால்ட் நிறுவனம் பேச மறுத்த காரணத்தால், ரஃபேல் ஒப்பந்தம் முடிவாகவில்லை என்ற உண்மையை ஏன் மறைக்க வேண்டும்.

       இன்று ரஃபேல் விமானம் தயாரிக்கும் ஒப்பந்தம் ஏன் ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை என கூச்சல் போடும் காங்கிரஸ் கட்சி, பாராளுமன்றத்தில் விளக்கம் கொடுத்த பின்னரும் கூட, தொடர்ந்து ஒரு பொய்யை கோயபல்ஸ் போல் பிரச்சாரம் செய்கிறார்கள்.  ஹெச். ஏ.எல் நிறுவனம் பயிற்சி விமானங்களை தயாரிக்கும் நிலையில் இருந்த போது, 180 பயிற்சி விமானங்கள் தயாரிக்க மத்திய அரசு ஹெச்.ஏ.எல். நிறுவனத்தற்கு அனுமதி கொடுத்திருந்தும், மருமகனின் நிர்பந்தத்தின் காரணமாக ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, ஸ்விட்சர்லாந்தின் பைலேட்டஸ் ஏர்கிராஃபட் நிறுவனத்திற்கு 180 பயிற்சி விமானங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதும், இதற்கு கைமாறாக 10 லட்சம் சுவிஸ் ஃபிராங்குள் அதாவது 7.5 கோடி ரூபாய் ராபர்ட் வதேராவின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது ஏன்?  இடைதரகர் சஞ்சய் பண்டாரி தனக்கு கிடைத்த கமிஷனில் ஒரு பகுதியை ராபர்ட் வதேராவின் கணக்கில் வரவு வைத்தார் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்த பின்னும் ஏன் ராகுல் காந்தி வாய் திறக்கவில்லை.  வங்கி கணக்கை சரிபார்ப்பதற்காக ராபர்ட் வதேராவிற்கு, பண்டாரியின் சொந்த டிராவல் நிறுவனம் 2012-ல் வருடம் ஆகஸ்ட் மாதம் இரு முறை விமான டிக்கட் வாங்கி கொடுத்ததோ அப்பொழுது தெரியவில்லையா நடைபெற்றது ஊழல் தான் என்பது. 

       2008-ல் ஆப்செட் இந்தியா சொலுஷனஸ் என்ற பெயரில் வெறும் ரூ 1லட்சம் மட்டும் முதலீடு செய்து துவங்கப்பட்ட நிறுவனம், சில ஆண்டுகளிலேயே இந்தியாவின் மிகப் பெரிய ஆயுத பேர வியாபாரியாக மாறியதின் பின்னணியில் ராபர்ட் வதேராவின் பங்களிப்பு உள்ளது என்ற உண்மையை ராகுல் காந்தியால் வெளியே சொல்ல முடியுமா.  M2016-ல் அமலாக்கத்துறை பண்டாரியின் அலுவலகத்தை சோதனை செய்த போது கிடைத்த ஆவணங்களில் ரஃபேல் விமான பேரம் குறித்து ஐ.மு.கூ. அரசு பிரான்ஸ் அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தை விவரங்கள் மற்றும் தொழில் நுட்ப வரைவுகள், ரகசிய ஆவணங்கள் கைப்ற்றபட்டன என்ற உண்மையை ராகுல் காந்தியிடம், ரபார்ட் வதேராவின் நண்பர் பண்டாரி கூறியதாக கூறுப்படுகிறதே,  அரசின் ஆவணங்கள் எவ்வாறு தனியார் ஆயுத வியாபரியின் வீட்டில் கிடைத்தது என்பதற்குறிய விளக்கத்தை ராகுல் காந்தி தர முடியுமா?  மேற்படி விவரங்கள் உண்மையானது தான் என மெட்ரோபோலிடன் மாஜிஸ்திரேட் நீதி மன்றம் சஞ்சய்  பண்டாரியை 2018-ல் குற்றவாளி என்று தீர்ப்பு கூறியது என்பது  பற்றிய முழு உண்மைகளை ராகுல் காந்தியும், ப.சிதம்பரமும் வெளியில் கூற தயாரா என்ற கேள்வி எழுகிறது. 

       ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி போராடுவது ஏன் என்ற கேள்விக்கு உரிய பதிலை ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும்.  ஆயிரம் கோடி கமிஷன் தங்களுக்கு வரவேண்டியது தடைபட்டு விட்டதே என்ற எரிச்சல் காரணமாக,  அல்லது தசால்ட் நிறுவனத்திற்கு போட்டியளார்களின் தூண்டுதலினால், காங்கிரஸ் கட்சி வசை பாடுகிறதோ,  மாப்பிள்ளை ராபர்ட் வதேராவிற்கு கிடைக்க வேண்டிய கமிஷன் தொகை கிடைக்காமல் போவதற்கு வழி வகை செய்த மோடியின் மீது திருடன் என குற்றம் சாட்டப்படுகிறது என்பதும், இந்தியாவின் பரம எதிரி பாகிஸ்தானுக்கு சமமாக இந்தியாவின் விமானப்படை வலுவடைந்து விடுமோ  என்ற அச்சத்தின் காரணமாகவும், காங்கிரஸ் கட்சி ரஃபேல் விமான பேரத்தை தி பெரிதாக்குகிறார்கள்.   காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் ரஃபேலை விடாப்பிடியாக பிடித்திருப்பதற்குறிய காரணங்கள் மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களில் ஒன்றாக தான் இருக்க முடியும் அல்லது அனைத்தும் சேர்ந்ததாக இருக்கும்.  இதை தெளிவுப்படுத்த வேண்டியது ராகுல் காந்தி என்பது மட்டும் உண்மையாகும்.

      

-    ஈரோடு சரவணன்