காங்கிரஸ்,தெலுங்குதேசம் எம்எல்ஏக்கள் டிஆர்எஸ் கட்சியில் இணைய முடிவு

காங்கிரஸ்,தெலுங்குதேசம் எம்எல்ஏக்கள் டிஆர்எஸ் கட்சியில் இணைய முடிவு

தெலங்கானா மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியில் சேருவதற்கு, காங்கிரஸ் (2), தெலுங்கு தேசம் (1) கட்சிகளை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர். ஹைதராபாதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரேகா காந்த ராவ், அத்ராம் சக்கு ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எஸ்.டி. பிரிவினரின் நலன்களுக்காக டிஆர்எஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளோம்; இதுதொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்துகளை கோரியுள்ளோம். தேவைப்பட்டால், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திப்போம்' என்றனர்.

தெலங்கு தேசம் (டிடிபி) எம்எல்ஏ சந்திர வெங்கட வீரய்யா, டிஆர்எஸ் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர் ராவை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் பேட்டியளிக்கையில், "எனது தொகுதியின் நலனுக்காக டிஆர்எஸ் கட்சியில் சேர முடிவெடுத்துள்ளேன்' என்றார். 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 19 எம்எல்ஏக்கள் உள்ளனர். ரேகா காந்த ராவ், அத்ராம் சக்கு ஆகிய 2 பேரும் டிஆர்எஸ் கட்சியில் இணையும்பட்சத்தில், அந்த எண்ணிக்கை 17ஆக குறையும். தெலங்கானா சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் வெங்கட வீரய்யா டிஆர்எஸ் கட்சியில் சேரும்பட்சத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 1ஆக குறையும். தெலங்கானா சட்டமேலவையில் காலியாகவுள்ள 5 உறுப்பினர்களை தேர்வு செய்ய நடைபெறும் தேர்தலில் டிஆர்எஸ் கட்சி 4 இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இன்னொரு இடத்துக்கு மஜ்லீஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 20 எம்எல்ஏக்களுடன் சேர்த்து, தெலுங்கு தேசத்தின் 2 எம்எல்ஏக்களின் ஆதரவும் இருந்தது. இதனால் ஒரு இடத்துக்கு அக்கட்சியால் வேட்பாளரை நிறுத்த முடியும். ஆனால் தற்போது 3 எம்எல்ஏக்கள், டிஆர்எஸ் கட்சியில் சேர முடிவு செய்திருப்பதன் மூலம் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.