காந்தியத்துக்கு எதிரானவை காங்கிரஸ் கொள்கைகள் - பிரதமர் மோடி விமர்சனம்

காந்தியத்துக்கு எதிரானவை காங்கிரஸ் கொள்கைகள் - பிரதமர் மோடி விமர்சனம்

 ஆங்கிலேயர் ஆட்சியின்போது உப்புக்கு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து, குஜராத்தில் உள்ள தண்டி கடற்கரையை நோக்கி மகாத்மா காந்தி நடைபயணம் சென்றதன் 89-ஆவது ஆண்டு தினம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) அனுசரிக்கப்பட்டது. 

சமத்துவமின்மை, ஜாதிய பாகுபாடு ஆகிய விஷயங்களில் காந்திஜிக்கு நம்பிக்கை கிடையாது. ஆனால், சமூகத்தில் பிளவு ஏற்படுத்துவதற்கு காங்கிரஸ் ஒருபோதும் தயங்கியதில்லை. மிக மோசமான ஜாதிக் கலவரங்கள், தலித் விரோத படுகொலைகள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றவைதான்.

ஊழலே காங்கிரஸுக்கு பிரதானம்: மிதமிஞ்சிய சொத்துகள் மீது பற்றற்று இருக்க வேண்டும் என்றும், அதில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் காந்தி வலியுறுத்தினார். ஆனால், காங்கிரஸ் கட்சி செய்ததெல்லாம் அவர்களது சொந்த வங்கிக் கணக்குகளை நிரப்பும் பணிகள்தான். ஏழைகளுக்கு அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்த வேண்டிய பணத்தில் அவர்கள் சொகுசு வாழ்க்கை முறையை கடைப்பிடித்தனர்.  

காங்கிரஸ் என்பதும், ஊழல் என்பதும் ஒத்தக்கருத்துடைய சொற்களாகிவிட்டன என்பதை நமது தேசம் அறிந்து வருகிறது. எந்தத் துறையின் பெயரைக் குறிப்பிட்டாலும், அதில் காங்கிரஸ் கட்சியின் ஊழல் இருக்கும். 

காங்கிரஸ் கலாசாரம் என்னவென்பதை காந்தியடிகள் நன்றாக அறிந்து வைத்திருந்தார். அதனால், நாடு விடுதலை அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சி கலைக்கப்பட வேண்டும் என அவர் விரும்பினார். இன்றைக்கு, மத்தியில் உள்ள நமது அரசாங்கம் அவரது பாதையில் நடைபோட்டு வருகிறது என்று மோடி தெரிவித்துள்ளார்.