காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் - சர்வதேச தலைவர்கள் கண்டனம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் - சர்வதேச தலைவர்கள் கண்டனம்

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு ரஷியா, அமெரிக்கா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் இந்தியாவுக்கு துணை நிற்போம் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

சீனா அதிர்ச்சி: சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கெங் ஸுயாங், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தியாவில் நடத்தப்பட்டுள்ள தற்கொலைத் தாக்குதலை சீனா கவனத்தில் கொண்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளோம். தாக்குதலில் மறைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

இலங்கை கண்டனம்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 1989-ஆம் ஆண்டுக்குப் பிறகு மாபெரும் தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் நிகழ்ந்த அந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியப் பிரதமர் மோடிக்கும், பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

வங்கதேசம் ஆதரவு: பயங்கரவாதம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை எதிர்ப்பது என்ற முடிவில் வங்கதேசம் உறுதியாக இருக்கிறது. அனைத்து விதமான பயங்கரவாத நடவடிக்கைகளையும் முற்றாக நிராகரிக்கிறோம். பயங்கரவாதத்தை முறியடிக்கும் நடவடிக்கையில் இந்தியா உள்பட சர்வதேச சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு வங்கதேசம் ஆதரவளிக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசினா உறுதியளித்துள்ளார்.

ஆஸ்திரேலியா இரங்கல்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைக் குறிப்பிட்டு, சுட்டுரையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய நினைவெல்லாம் இந்தியப் பிரதமர் மோடியுடனும், இந்திய மக்களுடனும் மட்டுமே இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற நாடுகள்....: பயங்கரவாதம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை சமரசமின்றி கண்டிக்கிறோம் என்றும், பயங்கரவாதிகளின் கொடுஞ் செயல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் நேபாளம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதல் கோழைத்தனமானது எனக் கூறியுள்ள சவூதி அரேபியா, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்போம் என்று தெரிவித்துள்ளது. பூடான், பிரான்ஸ், மாலத்தீவு, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.