குஜராத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா

குஜராத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன், கட்சியில் இருந்தும் விலகினார். அந்த மாநிலத்தில் கடந்த 4 நாள்களில் 3 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதவி விலகியுள்ளனர். 

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து ராஜிநாமா செய்து வருவது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, ஜாம்நகர் (ஊரகம்) காங்கிரஸ் எம்எல்ஏ தாராவியா தனது ராஜிநாமா கடிதத்தை சட்டப் பேரவைத் தலைவர் திரிவேதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை பேரவைத் தலைவரும் உறுதிப்படுத்தியுள்ளார். 

முன்னதாக, கடந்த 8-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜவாஹர் சாவ்தே, புருஷோத்தம் சபாரியா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதிவியில் இருந்து விலகினர். மேலும் அவர்கள் இருவரும் பாஜகவில் இணைந்துவிட்டனர். இப்போது, 3-ஆவதாக மேலும் ஒரு எம்எல்ஏவை காங்கிரஸ் இழந்துவிட்டது. கடந்த சில மாதங்களில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர சட்டவிரோத சுரங்க வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ பகவான் அண்மையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதில் ஜவாஹர் பாஜகவில் இணைந்தவுடன், அவருக்கு மாநில அமைச்சரவையில் இடம் கிடைத்தது. தனது தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் அவர் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மூத்த காங்கிரஸ் எம்எல்ஏ கன்வார்ஜி பவாலியா, பதவி விலகி பாஜகவில் இணைந்து மாநில அமைச்சரவையில் இடம் பெற்றார். அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தனது தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது முதல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகி, பாஜகவில் இணைவது தொடர்கதையாகி வருகிறது.

182 எம்எல்ஏக்களைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவையில் ஆளும் பாஜகவுக்கு 100 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி 71 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது.