குட்கா வழக்கில் மீண்டும் சுப்ரீம்கோர்ட்! திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை

குட்கா வழக்கில் மீண்டும் சுப்ரீம்கோர்ட்! திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசுக்கு 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி இழப்பு ஏற்படுத்தி, 40 கோடி ரூபாய்க்கு மேல் மாமூல் பெற்றதற்கான குட்கா டைரி கைப்பற்றப்பட்ட வழக்கில், 40 இடங்களுக்கும் மேல் சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தியது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையில் கீழ்மட்ட அதிகாரிகளும், குட்கா கம்பெனியைச் சேர்ந்தவர்களும் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்; இந்த ஊழலின் பிதாமகன்களாகத் திகழ்ந்து, ஊரை ஏமாற்றி உலாவரும் உயர்பதவியில் இருப்பவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை. 

இது, விசாரணை திணறித் திசை மாறுகிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை அனைவருடைய மனதிலும் ஏற்படுத்தியிருக்கிறது. மின்னல் வேகத்தில் இப்படியொரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதன் அடிப்படை நோக்கம் அழுத்தமா அல்லது அரசியலா அல்லது மேலிடத்துக் கட்டளையா என்பதெல்லாம் கேள்விக்குறியாகியிருக்கிறது. அமைச்சரையும் உயர் போலீஸ் அதிகாரிகளையும் விலக்கி விடுவிக்க இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.

குட்கா வழக்கு விசாரணை, நியாயமான முறையில் சட்ட ரீதியாக நடைபெற வேண்டும்; எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமில்லாமல் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன்பு நிறுத்தி, சிபிஐ என்ற மிக உயர்ந்த அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாத்திட வேண்டும் என்று, சிபிஐ பொறுப்பு இயக்குநரைக் கேட்டுக் கொள்கிறேன். 

குட்கா விவகாரத்தில், சுப்ரீம்கோர்ட் உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடைபெறுவதால், டிஜிபி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கும் எண்ணத்தில் சிபிஐ விசாரணை திசை மாறி விடாமல், பிழையான பாதையில் சென்றுவிடாமல் சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவை எள்ளளவும் பிசகாமல் சிபிஐ மதிக்க வேண்டும். அதற்கு மாறாக உள்நோக்கத்தோடும் பெயரளவுக்கும் விசாரணை நடைபெற்றால் நியாயமான, சுதந்திரமான, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் ஆட்படாத  விசாரணை கோரி திமுக சார்பில் மீண்டும் சுப்ரீம்கோர்ட்டை அணுகிட நேரிடும் என்று உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.