கூட்டணி பலத்தை நிரூபித்து மோடி அசத்தல்

கூட்டணி பலத்தை நிரூபித்து மோடி அசத்தல்

கூட்டணி கட்சி தலைவர்கள் புடைசூழ, பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்து, அசத்தினார்.
கூட்டணி பலத்தை நிரூபித்து காட்டும் வகையில், பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர்களும் ஏற்பாடு செய்த, இந்த அசத்தலான நிகழ்வு, எதிர்க்கட்சிகளை வாயடைக்க வைத்துள்ளது. தற்போதைய லோக்சபா தேர்தலில், ஆளும் கட்சியான, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, பலம் வாய்ந்த அணியாக களத்தில் உள்ளது. இதற்கு சவால் விடும் வகையில், காங்கிரஸ் தலைமையில், 'மெகா' கூட்டணி அமைக்க, எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முயற்சிகள், தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில், பா.ஜ., தலைவர்கள், தங்கள் கூட்டணி பலத்தை நிரூபித்து காட்டும் வகையில், உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், நேற்று ஏற்பாடு செய்திருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, நேற்று முன்தினமே, அவர், வாரணாசி வந்தார். அங்கு, பிரமாண்ட பேரணியை நடத்திக் காட்டி, எதிர்க்கட்சிகளை வாயடைக்க வைத்தார். 

நேற்று, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு தயாரானார். இதன்பின், வாரணாசியில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவருடன், கூட்டணி கட்சி தலைவர்களான, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீஹார் முதல்வருமான, நிதிஷ்குமார், லோக் ஜன சக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான, ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரும் வந்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த மோடி, அங்கு திரண்டிருந்த, பா.ஜ., தொண்டர்களை நோக்கி, உற்சாகமாக கையசைத்தார்.தே.ஜ., கூட்டணியின் பலத்தை நிரூபித்து காட்டும் வகையில், வேட்பு மனு தாக்கலில், கூட்டணி கட்சி தலைவர்களை ஒன்று திரட்டிய மோடியின் அதிரடி அரசியலால், காங்.,உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.