கோயில் சொத்துக்கள் மீட்க ஐகோர்ட் 6 வாரங்கள் ‘கெடு’

கோயில் சொத்துக்கள் மீட்க ஐகோர்ட் 6 வாரங்கள் ‘கெடு’

சென்னை அயனாவரம் கரியமாணிக்கப் பெருமாள் கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 6 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவிட்ட ஐகோர்ட், கோயிலை சுத்தமாகப் பராமரிக்க அறிவுறுத்தியது.

சென்னை அயனாவரத்தில் உள்ள கரியமாணிக்கப் பெருமாள் கோவிலை நிர்வகிக்க தன்னை அனுமதிக்க கோரி, செந்தில்குமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், ‘கரியமாணிக்கப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோயிலை சுத்தமாகப் பராமரிப்பதில்லை’ என்று முறையிடப்பட்டது. மேலும், கோயில் பகுதிகள் சுத்தமில்லாமல் இருப்பதற்கான புகைப்பட ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.  சம்மன்படி கோர்ட்டில் ஆஜராகியிருந்த அறநிலையத்துறை இணை ஆணையரிடம், இவை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அவர், உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘கோயில்களில் சுத்தமின்மையை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, பக்தி சூழலை ஏற்படுத்தும் வகையில் கோயில்களை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். அயனாவரம் கரியமாணிக்கப் பெருமாள் கோயிலின் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 6 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை அறிக்கையை இந்துசமய அறநிலையத்துறை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை 2019 ஜனவரி 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.