கோயில் புனரமைப்பு அனுமதியை அரசு – ஐகோர்ட் குழு தீர்மானிக்கும்

கோயில் புனரமைப்பு அனுமதியை அரசு – ஐகோர்ட் குழு தீர்மானிக்கும்

கோயில் புனரமைப்பு பணிகளுக்கான அனுமதி வழங்குவது குறித்து, அரசு மற்றும் ஐகோர்ட் அமைத்துள்ள நிபுணர் குழுக்கள் மட்டுமே ஆய்வு செய்து தீர்மானிக்க முடியும் என்று ஐகோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த, அறநிலையத்துறை சிறப்புக்குழுவிடம் முன்அனுமதி பெற வேண்டும் என, தமிழக அரசு 2017 பிப்ரவரி 14ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த உத்தரவில் இருந்து கிராமக்கோயில்களுக்கு விலக்கு வழங்கக் கோரி, ஐகோர்ட்டில் ஸ்ரீரங்கம் செண்டலங்கார ஜீயர் அறக்கட்டளை வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் கொண்ட ஐகோர்ட் பெஞ்ச் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்த பதில்மனுவின் விவரம்:

ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்தே, ‘கோயில்களின் பழமை மற்றும் புராதன மதிப்பு குறித்து ஆய்வு செய்த பிறகே, புனரமைப்பு பணிகளை அனுமதிக்கலாம்’ என்று முடிவுசெய்யப்பட்டது. இதன்படிதான், கும்பாபிஷேகத்துக்கு முன்அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, முதலில் அறநிலையத்துறை சிறப்பு குழுவை அணுக வேண்டும். இந்த குழு, கோயிலின் பழமை மற்றும் புராதன மதிப்பு குறித்த கருத்துருக்களை வழங்கும். அவற்றை, ஐகோர்ட் நியமித்துள்ள நிபுணர் குழு ஆய்வு செய்து, அனுமதி வழங்குவது குறித்து தீர்மானிக்கும்.

புராதன கோயில்களுக்கு மட்டுமே அரசாணை பொருந்தும் என்ற தவறான புரிதல் அடிப்படையில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.  இவ்வாறு பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த பதில்மனுவை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். ‘கோயில் புனரமைப்பு பணிகளுக்கான அனுமதி வழங்குவது குறித்து, அரசு மற்றும் ஐகோர்ட் அமைத்துள்ள நிபுணர் குழுக்கள் மட்டுமே ஆய்வு செய்து தீர்மானிக்க முடியும்’ என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.