கோரக்பூர் சமாஜ்வாதி எம்.பி. பாஜகவில் இணைந்தார்

கோரக்பூர் சமாஜ்வாதி எம்.பி. பாஜகவில் இணைந்தார்

உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூர் தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரவீன் குமார் நிஷாத், தெலங்கானா மாநில முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆனந்த பாஸ்கர் ரப்போலு ஆகிய இருவரும் நேற்று பாஜகவில் இணைந்தனர்.

“இரு தலைவர்களும் தங்கள் பகுதியில் செல்வாக்கு மிகுந்தவர்கள். மோடி அரசின் கொள்கைகள் மீதான நம்பிக்கை காரணமாக பாஜகவில் இணைந்துள்ளனர்” என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா கூறினார்.

பிரவீன்குமார், கடந்த ஆண்டு கோரக்பூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். நிஷாத் கட்சியின் தலைவரான சஞ்சய் நிஷாத்தின் மகன் ஆவார். கடந்தமுறை சமாஜ்வாதி கட்சி சின்னத்தில் போட்டியிட்ட பிரவீன் குமார், இம்முறை தனி சின்னத்தில் போட்டியிட விரும்பினார். இதனை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஏற்காததால் அவருடன் கருத்து வேறுபாடு வளர்ந்தது. இந்நிலையில் பிரவீன் குமார், பாஜகவில் இணைந்துள்ளார். கோரக்பூர் தொகுதிக்கான வேட்பாளரை பாஜக இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் இங்கு பிரவீன் குமாரை பாஜக நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.