கோவை அப்பதாவுக்கு மத்திய அமைச்சர் சல்யூட் ..!

கோவை அப்பதாவுக்கு மத்திய அமைச்சர் சல்யூட் ..!

கோவை வடிவேலம்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி. 80 வயதான இந்த பாட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இட்லி கடை நடத்தி வருகிறார். ஒரு இட்லி ஒரு ரூபாய் என விற்று தொழில் நடத்தி வரும் பாட்டி குறித்த செய்தி சமீபத்தில் வைரலானது. காசுக்காக இல்லாமல் மக்களின் பசியைத் தீர்ப்பதே முக்கியம் என்ற பாட்டியின் மனிதத்துக்கும் பாராட்டுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா பாட்டிக்கு தொழிலில் முதலீடு செய்து உதவுவதாக அறிவித்திருந்தார். இந்த ட்வீட் பதிவைக் கண்ட மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக கமலாத்தாள் பாட்டிக்கு உதவி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அதிகாரிகள் கமலாத்தாள் பாட்டிக்கு எல்பிஜி இணைப்பு வழங்கினர். இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “கமலாத்தாளின் எண்ணத்துக்கும் அர்ப்பணிப்பு உணர்வுக்கும் எனது சல்யூட். உள்ளூர் ஓ.எம்.சி அதிகாரிகளின் துணையோடு அவருக்கு எல்பிஜி இணைப்பு கொடுத்ததற்கு மகிழ்ச்சி. பல தடைகளையும் தாண்டி சமூகத்துக்காகக் கடுமையாக உழைக்கும் இவரைப் போன்றோரை நாம் உயர்த்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.