சபரி மலை விவகாரமும் – அமித் ஷா வின் பேச்சும் -  வக்கிரபுத்தி எதிர்கட்சிகளின் வசை மொழியும். – பகுதி 1

சபரி மலை விவகாரமும் – அமித் ஷா வின் பேச்சும் - வக்கிரபுத்தி எதிர்கட்சிகளின் வசை மொழியும். – பகுதி 1

    அக்டோபர் மாதம் 27ந் தேதி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, கண்ணூரில் புதிதாக கட்டப்பட்ட பா.ஜ.க. அலுவலகத்தை திறந்து வைத்து பேசியது, ஐயப்ப பக்தர்கள் மீது கேரள மார்கிஸ்ட் அரசு, காவல் துறையைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.   ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் உள்ளிட்ட 2,000 பேர்களை கைது செய்யப்பட்டதை அவர் வன்மையாக கண்டித்தார்.  மேலும் ஒரு படி மேலே போய் நெருப்புடன் விளையாட நினைத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையும்,   பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ந்தால், பினராயி விஜயன் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் கூறினார். அவர் அவ்வாறு  கூறியதை விமர்சிக்கிறோம்  என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி, மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட், மாயாவதி ஆகியோர் விடுத்துள்ள கண்டன அறிக்கைகளை படித்துப்பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

     இந்துக்களுக்கு வக்காலத்து வாங்கி எவர் பேசினாலும், அவர்களை மதவாதியாக சித்தரிப்பவர்கள், கண்டன அறிக்கை வெளியிடுபவர்கள்,  கடவுளின் பெயரால் பதவிப் பிரமாணம் எடுப்பது கேவலமானது, அசிங்கம் என்று எண்ணி செயல்படும் கம்யூனிஸ்ட்களுக்கு, தற்போது சபரி மலையின் மீது திடீர் பாசம் பொங்கி வழிகிறது.  முன்பு இந்து கோயில்களை இடித்துவிட்டு, அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியவர்கள் காம்ரேட்டுக்கள்.  இன்று  மிகப் பெரிய ஜனநாயகவாதியாக காட்சித் தரும் காம்ரேட்டுகளும், ராகுல் காந்தியும், பல்வேறு கால கட்டங்களில் பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் , சிறுபான்மையினரின் அடாவடி செயலுக்கும் வக்காலத்து வாங்கிய போது,  தெரியாத சட்ட விவகாரம்,  அமித் ஷா இந்துக்களுக்கு வக்காலத்து வாங்கும் போது தான் தெரிகிறது.  இது அப்பட்டமான சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியல் என்பதை மறந்து விடக் கூடாது.

     அமித் ஷா வின் பேச்சு பற்றி, மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு விடுத்துள்ள அறிக்கையில், உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு சவால்விட்டு இருப்பதுடன், தீர்ப்பு எதிராக கட்சித் தொண்டர்களைப் போராட தூண்டியும் விட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.  விலங்குச் சந்தையில் அடிமாடுகளை விற்கக் கூடாது என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்த போது, கேரள முதல்வர் பினரயி விஜயன், பிரதமர் மோடிக்கு எழுதிய கடித்தத்தில்,  மக்களின் உணவுப் பழக்கத்திலும், மத உணர்வுகளிலும் சட்டம் கூட  தலையிட முடியாது என குறிப்பிட்டுள்ளதை  மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கவனிக்கவில்லை என தெரிகிறது.  சபரி மலை விவகாரம் என்பது மத உணர்வுகளின் முன் உள்ள பிரச்சினை என்பதை மறந்து விட்டு, இந்துகளின் உணர்வுகளை எவ்வளவு கொச்சைப்படுத்தினாலும், கேட்பாரும் இல்லை, மீட்பாரும் இல்லை என்பதால் பினராயி விஜயன் நடக்கிறார்.  இவருக்கு உடந்தையாக கட்சியின் பொலிட்பிரோவும் செயல்படுகிறது.  கேரள அரசை கலைக்க கட்சி தொண்டர்கள் பாடுபடுவார்கள் என கூறியதை தவறாக புரிந்து கொண்டு, அறிக்கை வெளியிடுகிறார்கள்.   திருவாளர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் தலைமையில் அமைந்த முதல் அரசை நேரு அரசியல் ஷரத்து 356 ஐ பயன்படுத்தி கலைத்த போது, ஜனநாயகத்தை பற்றி யார்  வாய்திறந்தார்கள்? இன்று அந்த கட்சிக்கு உதவும் வகையில் இடதுசாரிகள் செயல்படுகிறார்கள்.

     கேரள மாநில அரசு சட்டமன்றத்தை கூட்டி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தீர்மானம் கொண்டு வர வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை வைத்தால், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான கருத்து என கொக்கரிக்கும் பினராயி விஜயனுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் முன் வைக்கும் ஒரு கேள்வி,  1998 கோவை குண்டு வெடிப்பிலும், 2008 பெங்களுர் சீரியல் குண்டு வெடிப்பிலும் தொடர்புள்ளதாக கூறப்பட்ட அப்துல் நாசர் மதானியை சிறையிலிருந்து விடுவிக்க 2006-ல் கேரள மார்க்சிஸ்ட் அரசு, சட்ட மன்றத்தை இதற்காகவே கூட்டி சட்டம் இயற்றி விடுதலை செய்ததே, அப்பொழுது நீதி மன்றத்திற்கு மரியாதையை கொடுத்ததா? என்பதை விளக்க வேண்டும்.   அமித் ஷா பேசியது, உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக தொண்டர்களை தூண்டி விடுவதாக கூறும், மார்க்சிஸ்ட்கள், இதற்கு என்ன பதில் கூறுவார்கள்? 

     காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், கிரிமினல் குற்றவாளிகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் அபிஷேக் மனு சிங்கி, அரசு அமைப்புகளை முதலில்  வலுவிழக்கச் செய்து பின்னர் அவற்றை செயலிழக்கச் செய்வது தான் ஆளும் பா.ஜ.க.வின் குறிக்கோள்  என குறிப்பிட்டுள்ளார்.  திருவாளர் ராகுல் காந்திக்கு சரியான தகவல்களை கொடுக்க தவறிய இவர்கள் பா.ஜ.க.வைப் பற்றிய விமர்சனங்களை தடுமாற்றத்துடனே அறிக்கை விடுகிறார்கள்.   பாரத தேசத்தை ஐம்பதாண்டு காலமாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி அரசு அமைப்புகளை எவ்வாறு வலுவிழக்கச் செய்தது என்பதை சற்றே திரும்பி பார்க்க வேண்டும்.   உள்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றவர் சர்தார் வல்லபாய் பட்டேல்,  ஐநூறுக்கு மேற்பட்ட சமஸ்தானங்களை இணைக்கும் பொறுப்பு உள்துறை அமைச்சகத்துக்தான் என்பது  தெரிந்தும், காஷ்மீர் சமஸ்தானத்தை இணைக்கும் பொறுப்பை ஏன் நேரு எடுத்துக் கொண்டார்?  இந்த செயலுக்கு என்ன பெயர் வைக்கலாம்?  தமிழக  அரசுக்கு சொந்தமான கச்சத் தீவை மாநில அரசின் அனுமதியின்றி இலங்கைக்கு தாரைவார்க்க இந்திரா காந்தி செய்த செயல், மத்திய மாநில அரசின் ஒருங்கிணைப்பை சீர்குழைத்த செயலாக கருதலாமா?   அவசர நிலை கொண்டு வந்த பின்னர், அரசு அமைப்புகள் எவ்வாறு  சீர்குழைக்கப்பட்டன என்பதையும் தெரிந்து கொண்டு, மோடியின் மீது குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டும்.  இந்திரா தான் இந்தியா,  இந்தியா தான் இந்திரா என பொது மேடைகளில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே. பரூவா முழுங்கிய போது, தெரியாத விஷயம், அமித் ஷா பேசியவுடன் தான் தெரிகிறது காங்கிரஸ் கட்சிக்கு.

     பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி, மத்திய அரசின் தவறான அணுகுமுறையால் சிபிஐ, சிவிசி, மத்திய அமலாக்கத் துறை, ரிசர்வ் வங்கி ஆகியவை கடும் நெருக்கடியில் உள்ளன என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கோடிக் கணக்கான ரூபாய் கொள்ளையடித்த மாயாவதியின் மீது வழக்கு தொடுத்தால், அரசின் மீது பழி சுமத்தும் பழக்கம் மாயாவதியின் சிறப்பு அம்சமாகும்.   அரசியல் ஆதாயம் வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க.வை தவிர மற்ற கட்சிகள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக களம் காணுவது ஏன் என்பதற்கு சரியான விளக்கம் கொடுக்க முன்வருவதில்லை.

                                                                                                    தொடரும்....

-ஈரோடு சரவணன்.