சம்ஜெளதா குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து அஸீமானந்தா, 3 பேர் விடுவிப்பு

சம்ஜெளதா குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து அஸீமானந்தா, 3 பேர் விடுவிப்பு

சம்ஜெளதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சுவாமி அஸீமானந்தா, லோகேஷ் சர்மா, கமல் செளஹான், ராஜிந்தர் செளத்ரி ஆகிய நான்கு பேரையும் விடுவித்து பஞ்ச்குலா என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெகதீப் சிங் தீர்ப்பளித்துள்ளார். 

தில்லி மற்றும் பாகிஸ்தானின் லாகூர் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் சம்ஜெளதா அதிவிரைவு ரயிலில் கடந்த 2007-ஆண்டு நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் இரு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. ஹரியாணாவின் பானிபட் அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தில், 68 பேர் பலியாயினர். அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கை விசாரித்து வந்த ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், இறுதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், மார்ச் 11-ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக இருந்தது. 

இதனிடையே, குண்டு வெடிப்பில் உயிரிழந்த பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது வகீலின் மகள் ரஹீலா வகீல், என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், குண்டு வெடிப்பை நேரில் பார்த்த பாகிஸ்தானியர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து சம்ஜெளதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சுவாமி அஸீமானந்தா உள்ளிட்ட 4 பேரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.