'சர்கார்’ புது சர்ச்சை பிளாஷ்பேக்!

'சர்கார்’ புது சர்ச்சை பிளாஷ்பேக்!

‘‘விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில், அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகளை அமைத்துள்ளனர். அவற்றை நீக்குமாறு படக்குழுவினருக்கு அறிவுறுத்தப்படும். அவர்களே நீக்கிவிட்டால் நல்லது. இல்லாவிட்டால், முதல்வருடன் கலந்துபேசி அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும்’’ – இது, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் அதிரடி.

இதே வகையில் ஜெயக்குமார், உதயக்குமார், சி.வி.சண்முகம் என, கொந்தளிக்கும் அமைச்சர்களின் வரிசை வளர்ந்துகொண்டே போகிறது!
இந்த அளவுக்கு ஆவேசப்படுத்தும் ‘அரசியல் உள்நோக்கம்’ என்ன?

அதை அறிந்துகொள்ள, கொஞ்சம் பிளாஷ்பேக் : 

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘அரசியல்’ மெல்ல மெல்லத் தலைகாட்டி வந்தது.
இதெல்லாம் திமுக நடத்தும் ‘பொம்மலாட்ட’ வேலை என்று அதிமுகவினரிடம் ஒரு கொதிப்பு வந்தது. இந்த சீண்டல்களின் விளைவாக, பல நெருக்கடிகளை விஜய் சந்திக்க வேண்டியிருந்தது.

 சாம்பிளுக்கு இரண்டு : 

* சில ஆண்டுகளுக்கு முன், சென்னை மீனம்பாக்கம் பகுதியில் ஒரு கல்லுாரி மைதானத்தில் விஜய் பிறந்தநாள் விழா, பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை முழுக்க விஜய் மற்றும் அவரது தந்தை படங்கள் கொண்ட கட்அவுட், பேனர்கள் வைக்கப்பட்டன. ஆனால், ‘பிரஷரால்’ கதிகலங்கிய கல்லுாரி நிர்வாகம், விழாவுக்கு இடம் தர முடியாது என்று ‘கும்புடு’ போட்டதால், கடைசிநேரத்தில் அந்த விழா ரத்து செய்யப்பட்டது!

* ‘பிரஷரால்’, விஜய் நடித்த ‘தலைவா’ படத்தை சென்னையில் அறிவித்த தேதியில் வெளியிட முடியவில்லை. ஜெ., தங்கியிருந்த கோடநாடு பங்களாவுக்கு சென்று விஜய்யும், டைரக்டரும் ‘தவம்’ கிடந்தும், ‘குட்பை’தான் பதிலானது. தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் கெஞ்சிக்கூத்தாடிய பிறகே, அந்த படம் சில நாட்கள் கழித்துவெளியானது.

இனி, சர்கார் பட விவகாரங்கள்:

படத்தில் வரலட்சுமி கேரக்டரின் பெயர், ‘கோமளவள்ளி’. இது, ஜெயலலிதாவின் சொந்தப்பெயர்!

கோமளவள்ளி கேரக்டர் கெட்அப் எல்லாம் ஜெ., ஸ்டைல்!

கோமளவள்ளி கேரக்டரை, தந்தையையே விஷம் கொடுத்துக் கொல்கின்ற, அம்மாவையும் கொல்ல முயற்சிக்கின்ற கொடூர வில்லியாகச் சித்தரித்துள்ளனர்.

 சுந்தர் ராமசாமியை (படத்தில் விஜய் கேரக்டரின் பெயர்) அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறார் கோமளவள்ளி. தேர்தலில் கோமளவள்ளி கட்சியினரை எதிர்த்துப் போட்டியிடும் ‘சமூக ஆர்வலர்’(?!)களை ஆதரிக்கும் சுந்தர் ராமசாமி, ‘கோமளவள்ளிதான் அவரது தந்தையைக் கொன்றார்’ என்பதை அவரது அம்மா மூலமே அம்பலப்படுத்தி, கோமளவள்ளியை தேர்தலில் வீழ்த்தி, ஒரு சமூக ஆர்வலரை முதல்வராக்குகிறார்.

சரி.... இந்த சர்ச்சை குறித்து, அரசியல் நோக்கர்கள் என்ன கூறுகிறார்கள்?

‘‘சர்கார் படத்தை தயாரித்திருப்பது திமுக மேலிட குடும்பம்.... படத்தில் ஹீரோவாக நடித்திருப்பது விஜய்... திமுக மற்றும் விஜய்யின் பொது எதிரி அதிமுகதானே? 

ஜெ., மீதான அவர்களின் கோபம்தான், இந்த படத்தின் கோமளவள்ளி வில்லி கேரக்டராக உருவாகியிருக்கிறது... 

ஜெ.,வை எதிர்க்க முடியாமல் ஒடுங்கியிருந்த அவர்களின் கோபம்தான், கோமளவள்ளியை தேர்தலில் வீழ்த்தும் காட்சியாக மாறி, கற்பனை சந்தோஷ விஷயமாக மாறியிருக்கிறது.... 

ச்சே, இதெல்லாம் அதீத கற்பனை என்று சந்தேகம் இருந்தால், இன்னொரு ஆதாரத்தைப் பாருங்கள் : ‘சிலர் கோடி கோடியாக பணம் சம்பாதித்தார்கள். அதெல்லாம் கன்டய்னர்களில் வைக்கப்பட்டது. அந்த கன்டய்னர்களைக் கூட நேரில் பார்க்க முடியாமல் சிலர் செத்துப்போனர்கள்’ என்று படத்தில் ஒரு டயலாக் வருகிறதே? அது யாரைக் குறிக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லையே? 

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் இயங்கி, அரசுக்கு குடைச்சல் கொடுத்துவரும் சமூகவிரோதிகளுக்கும் இந்த படத்தில் ஆதரவு வாய்ஸ் இருக்கிறதே? 

ஆக, ஜெ., மற்றும் அதிமுக இமேஜில் பாதிப்பை ஏற்படுத்தி, அரசியல் லாபமடைவதுதான் இந்த படத்தின் ஒரே உள்நோக்கம் என்று அதிமுக தரப்பு கொந்தளிப்பு நியாயமானதுதான்... ஆனால், அவர்களின் எதிர்ப்பே படத்துக்கு மறைமுக விளம்பரமாக மாறிவிடுமே, அதை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்?’’ என்கிறார்கள், அரசியல் நோக்கர்கள்.