"சர்கார்" திரை விமர்சனம்

"சர்கார்" திரை விமர்சனம்

சர்கார் திரைபடம் தீபாவளி அன்று பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ளது.  தேர்தலில் ஓட்டு போடுவதற்காக நான்கு மணிநேரப்பயணமாக அமெரிக்காவிலிருந்து வருகிறார் விஜய். ஓட்டு சாவடியில் அவரது வாக்கு ஏற்கனவே கள்ள வோட்டாக பதிவானது கதையின் திருப்பம்.இந்த அநீதியை எதிர்த்து செய்யும் போராட்டம் தான் கதை. 

49 P என்ற சட்டப்பிறிவு மூலம் கள்ள வோட்டினால் ஓட்டு போட முடியாதவர்களுக்கு Ballot voting மூலம் தங்கள் வாக்கினை செலுத்த வாய்ப்புள்ளது என்பதை கதாநாயகன் புரிய வைப்பது புதிய தகவலாக இருந்தது. 32 மாவட்டத்திலும் 32 விதமான பிரச்சினை. மணல் திருட்டு , கந்து வட்டி , காவேரி போன்ற பிரச்சினைகளால் தவிக்கும் மக்களை மிகக்குறுகிய காலத்தில் திரட்டுகிறார் கதாநாயகன். தொடர்ந்து மக்களை அலட்சியப்படுத்தும் சுயநல அரசியலில் ,  மிக எளிதாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட காரணமாக அமைவது நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் ஒரு காரணம் என்றால், ஓட்டு போடாமல் அலட்சியமாக இருப்பது துரோகம் என கொதிக்கிறார் கதாநாயகன். எடுங்கடா ஓட்டர் ஐ டி ய ! என்று கூறுவது க்லைமாக்சில் வரும் நல்ல பஞ்ச்.

திரைகதை வலுவானதாக அமையவில்லை.அதிமுக அரசிற்கெதிரான திமுகவின் முழு நீள ப்ரசாரப்படமாக அமைந்துள்ளது. கதாநாயகன் அமெரிக்காவில் மிகச்சிறந்த நிறுவனத்தின் அதிபர், G L நிறுவனத்தை சேர்ந்த சுந்தர் ராமசாமி . கூகில் , சுந்தர் பிச்சை நினைவிற்கு  வருகிறார். இது போல பல பாத்திரங்கள் , காட்சிகள் அதிக மாற்றமில்லாமல் இன்றைய சம்பவங்களை சார்ந்து உள்ளன. இயக்குனர் கொஞ்சம் மாற்றி அமைக்க முயற்சித்திருக்கலாம். 

பழ கருப்பையா , ஊழலில் திளைக்கும் முதல்வராக வருகிறார். அவருடைய 'நம்பர் 2'  ராதாரவி . அவர்களின் ரிமோட் கண்ட்ரோலாக செயல்படும் 'பாப்பா' பாத்திரத்தில் சதித்திட்டம் தீட்டும் சூத்திரதாரியாக வரலட்சுமி சரத்குமார்  மிடுக்காக நடித்துள்ளார். கதாநாயகி கீர்த்தி சுரேஷ் பூத் ஏஜண்டாக அறிமுகமாகிறார். கூடக்கூட வருவதை தவிர பெரிதாக ரோல் இல்லை. யோகி பாபுவுக்காவது இன்னும் கூட வாய்ப்பு கொடுத்திருக்கலாம். மற்றபடி முழுக்க முழுக்க விஜய் மைக்கை பிடித்து செய்யும் ப்ரசாரம் தான்.

கட்சி சார்பற்ற ரசிகர்களுக்கு படம் சற்று ஏமாற்றம் தான்.