சர்வதேச பயங்கரவாதி மசூத் அஸார் -  மத்திய அரசின் ராஜதந்திரத்துக்கு கிடைத்தது பெரும் வெற்றி

சர்வதேச பயங்கரவாதி மசூத் அஸார் - மத்திய அரசின் ராஜதந்திரத்துக்கு கிடைத்தது பெரும் வெற்றி

மத்திய அரசு துாதரக ரீதியாக மேற்கொண்ட முயற்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. நம் நாட்டில் நடந்த பல பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் - இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அஸாரை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. இந்த முயற்சிக்கு இதுவரை முட்டுக்கட்டையாக இருந்த சீனா தற்போது பின் வாங்கியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல், சமீபத்தில் ஜம்மு - காஷ்மீர் புல்வாமாவில் நடந்த தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டவன் மசூத் அஸார் 50. பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான இவனை கைது செய்யவும் அவனது அமைப்பை முடக்கவும் மத்திய அரசு 2009ம் ஆண்டிலிருந்து துாதரக ரீதியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

சீனாவுடன் மத்திய அரசு அதிகாரிகள் பல சுற்று பேச்சு நடத்தியும் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு அந்த நாடு ஒத்துழைப்பு தரவில்லை. வேறு வழியில்லாமல் சமீபத்தில் நேரடியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் வகையில் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் வரைவு தீர்மானத்தை பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தாக்கல் செய்தன. இந்த தீர்மானத்தை சீனாவால் நேரடியாக எதிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. மத்திய அரசு அதிகாரிகள் இது தொடர்பாக சீன அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தினர்.

சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சுகாங் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில் 'மசூத் அஸார் விவகாரத்தில் விரைவில் அனைத்து தரப்பும் ஏற்கும் வகையிலான தீர்வு ஏற்படும். மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்' என்றார்.

மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு தெரிவித்துள்ள எதிர்ப்பை விலக்கி கொள்வதாக சீனா நேற்று அறிவித்தது. இதையடுத்து மசூத் அஸார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளான். இது மத்திய அரசு மேற்கொண்ட துாதரக ரீதியிலான முயற்சிக்கு கிடைத்த பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

ஐ.நா.வுக்கான இந்திய துாதர் செய்யது அக்பருதீன் கூறுகையில் ''அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து சுமுகமான முடிவை எடுத்துள்ளோம். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்ட அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்'' என்றார்.