சவிதா பென்னுக்கு, தேச வளர்ச்சி முக்கியம் சொத்து அல்ல

சவிதா பென்னுக்கு, தேச வளர்ச்சி முக்கியம் சொத்து அல்ல

தேசத்தின் முதல் புல்லட் அதிவிரைவு ரயில் தடம் அமைக்கும் பணிக்கு சவிதா பென் தனது மூதாதையர் பூமியை தானமாகத் தந்திருக்கிறார். 80 வயதைத் தாண்டிய அவர் அளித்துள்ள நிலம் சுமார் 12 ஹெக்டேர். அதற்கு வெறும் 30,000 ரூபாய் மட்டும் பெற்றுக்கொள்ள சம்மதித்திருக்கிறார். குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டத்தில் உள்ள சன்சத் கிராமத்தை சேர்ந்த சவிதா பென் தற்போது ஜெர்மனியில் வசிக்கிறார். அங்கு இந்திய உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். புல்லட் ரயில் திட்டத்துக்காக மாநிலத்தில் கையகப்படுத்தப்படும் முதல் துண்டு நிலம் இது என்று திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் தனஞ்ஜய் குமார் தெரிவித்தார். ஆமதாபாத்தில் இருந்து மும்பை வரையிலான 508 கிலோ மீட்டர் புல்லட் ரயில் தடம் அமைக்க 1,400 ஹெக்டேர் நிலம் தேவை. அதில் சுமார் 1,200 ஹெக்டேர் தனியாரிடம் இருந்து தான் பெற வேண்டும். உலகப் புகழ்பெற்ற சுவாமிநாராயண் ஆன்மீக இயக்கத்தின் தலைவர் பிரமுக் சுவாமி பிறந்ததும் சன்சத் கிராமத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.